<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

"""தமிழ் நாடு ""

"""தமிழ் நாடு "" என பெயர் சூட்ட தீர்மானம் தயாரித்து தாக்கல் செய்தவர் தோழர் பிராமமூர்த்தி.
அவர் வெளிநாடு சென்றிருந்த போது அவையில் அதனை முன்மொழிந்து பேசியவர் தோழர் புபேஷ் குப்தா -
அதன் பின் வழிமொழிந்தவர் சி.என்.அண்ணாத்துரை,
மேலும் தமிழ்நாடு என பெயர் மாற்றம் கோரி காமராஜ் ஆட்சியில் விருதுநகரில் 73 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
உண்ணாவிரத பந்தலை பிரித்து சேதப்படுத்தியவர்கள் காங்கிரசார் .
போராட்டத்திற்கு இறுதி வரை பாதுகாப்பு தந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்'-
சங்கரலிங்கனார் தனது மறைவுக்குப் பின் அவரது உடலை - கம்யூனிஸ்ட்களிடம் ஒப்படைத்திட உயில் எழுதினார்.
அதன்படி தோழர்கள் KTK தங்கமணியும், KB.ஜானகி அம்மாவும். அன்னாரது உடலை பெற்று 1000க்கணக்கானோருடன் இறுதி ஊர்வலம் சென்று தகனம் செய்தார்.
சுதந்திர போராட்டத்தியாகி -
"" தமிழ்நாடு"" பெயர் வைத்திட போராடி உயிர் நீத்து -
இறுதியில் கம்யூனிஸ்டாக மறைந்தார்.
லால் சலாம் ! தியாகி தோழர்.
சங்கரலிங்கனாருக்கு !
-இது தான் 50 வருட கொண்டாட்டத்தில் சொல்ல பட வேண்டிய உண்மைகள்....
""தமிழ்நாடு ""பெயர் வர முக்கிய காரணம்
கம்யூனிஸ்டுகள்....
சரித்திரம் சரியாக இருக்க வேண்டும்...
Ram Subbu பதிவு

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

‘நம்ம குடும்பம், நம்ம தீக்கதிர்’




க.கனகராஜ்,முதன்மைப் பொதுமேலாளர், தீக்கதிர்.

அவர்கள் அதை என்னிடம் சொன்னபோது எனக்கு நம்பிக்கையோ, உற்சாகமோ வரவில்லை. ஆயினும், எதுவுமே நடக்காதபோது இப்படி முயற்சித் தாலென்ன? என்கிற ஒரே ஒரு காரணம் மட்டுமே அவர்கள் சொன்னதை மறுத்து சொல்லாமல் இருந்ததற்கு காரணமாக இருந்தது. தீக்கதிர் மதுரை பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரனும், நிர்வாக மேலாளர் ராஜ்மோகனும், தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு செயலாளர் என். பாண்டியுடன் பேசியதை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
“தீக்கதிரை நம் கட்சி உறுப்பினர்களிடம் மட்டுமன்றி கட்சி உறுப்பினர்களது குடும்பங்களின் நேசிப்பாகவும் மாற்ற ஒரு முயற்சி எடுக்கலாம், ‘நம்ம குடும்பம், நம்ம தீக்கதிர்’ என்ற பெயரில் கட்சி உறுப்பினர்குடும்பம் ஒவ்வொன்றையும் தீக்கதிர் வாங்கவேண்டுமென்று நேரடியாக சந்தித்து வேண்டுகோள் விடுக்கலாம். திண்டுக்கல் நகரத்தில் மட்டும் சுமார் 500 கட்சி உறு ப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒருமுறை நேரடியாக சந்திப்பதற்கு இதுவொரு வாய்ப்பு. குடும்பத்தினரை சந்திப்பதற்கும் ஒரு வாய்ப்பு ”என்று அவர்கள் என்னிடம் சொன்னபோது இதனால்பலன் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் மறுத்துச் சொல்லவில்லையே தவிர அதை நோக்கி முன்தள்ள நான் முயற்சிக்கவில்லை. 24-7-2017 அன்று தீக்கதிர் நிர்வாகஉபகுழு கூட்டம் மதுரையில் நடைபெறு வதாக இருந்தது.
நம்ம தீக்கதிர், நம்மகுடும்பம் இயக்கத்தை துவக்கி வைத்து விட்டு மதுரைக்கு வந்து விடுங்கள் என்றுஅவர்களே நிர்ணயித்த ஒரு அட்ட வணையையும் என்னிடம் கூறினார்கள். மதுரையில் வைக்கிற கூட்டத்தை திண்டுக் கல்லில் வைத்துக் கொள்ளலாம் எனமுடிவு செய்து அன்றைய தினம் காலையில் இந்த இயக்கத்தை துவக்குவதாக இருந்தோம். காலை 7.45 மணிக்குதான் அதுதுவங்கியது. மாவட்டக்குழு செயலாளர் பாண்டி, திண்டுக்கல் நகரக்குழுவின் செயலாளர் பி.ஆசாத் இவர் களோடு மாவட்ட நிருபர் இல.முருகேசன் ஆகியோர் சொல்கிற இடத்திற்கு நானும் சென்றேன்.அய்யன்குளம் கிளைத் தோழர்கள் காலை 6 மணிக்கு கூடி, நாங்கள் செல்ல தாமதம் ஆனதால் கலைந்து சென்று விட்டார்கள். நாங்கள் போன பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.
மிகவும் சிரமப்படுகிற, பொருளாதார நெருக்கடி யிலிருக்கிற தோழர்களைக் கொண்ட கிளை அது. பத்திரிகைக்காக ஒரு நாளைக்கு 5 ரூபாய் செலவழிக்க முடியாதா? என்றகேள்வியை முன்வைத்த போது,முகத்தில் அறைவது போல, அதற்கு கூட வாய்ப்பு இல்லாத நிலையைமிகுந்த தயக்கத்தோடு தோழர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த தோழர்களுக்கு, “பொறுப்பிலிருக்கிற தோழர்கள் வந்திருக்கிறார்கள். வெறுங்கையோடு அனுப்பக்கூடாது” என்கிற மனநிலை தொற்றிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. எனவே, அங்கும் இங்குமாக தேடியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் 2 ஆண்டுச் சந்தாக்களையும், 2 ஆறுமாதச் சந்தாக்களையும் பிடித்துக் கொடுத்தார்கள்.
இந்த எண்ணிக்கை நிச்சயமாக யாரையும் உற்சாகப்படுத்திவிட முடியாது. ஆனால் இந்த எண்ணிக்கையைத் தாண்டி தோழர்கள் காட்டிய ஆர்வமும், அவர்கள் நடந்து கொண்ட விதமும் மிகப்பெரிய உந்துசக்தியாக மாறிப்போனது. உற்சாகங்கள் எப்போதுமே மேலிருந்துமட்டுமே செலுத்தப்பட வேண்டுமென்ப தில்லை. பொறுப்பில் இருப்பவர்கள், ஆரம்ப நிலையில் இருக்கக்கூடிய தோழர்களிடமிருந்து பீறிட்டு எழும் உற்சாகத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதை அது உணர்த்தியது. அதற்குப்பின்பு 7-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக தினசரி காலையிலும், சிலநேரம் மாலையிலுமாக இது தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும் தீக்கதிரிலிருந்து மதுக்கூர் ராமலிங்கம், எஸ்.பி.ராஜேந்திரன், ராஜ்மோகன், உமாபதி, ஜெயராஜ் என்றுயாராவது ஒரு தோழர் எனக் கலந்து கொண்டார்கள்.
மாவட்டக்குழு செயலாளர் பாண்டியும், நகரக்குழு செயலாளர் ஆசாத்தும், தீக்கதிர்மாவட்ட நிருபர் இல.முரு கேசனும் தொடர்ச்சியாக கலந்து கொண்டார்கள். கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்ற 4-ஆம் தேதி தவிர அனைத்து தினங்களிலும் இந்த இயக்கம் நடைபெற்றுள்ளது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ஆர்.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர் பிரபாகரன், நகர்குழு உறுப்பினர்கள் அரபு முகமது, கே.எஸ்.கணேசன், நடராஜன்,வின்சென்ட், தவகுமார், சி.பி.ஜெயசீலன், பிச்சைமுத்து, அருள்ஜோதி, எஸ்.ஜோதிபாசு உள்ளிட்ட தோழர்கள்வெவ்வேறு தினங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.ஆகஸ்ட் 5ஆம் தேதி மாலை சவேரியார்பாளையத்தில் 11வது நாள் நடைபெற்ற சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மீண்டும் ஒருமுறை நான் கலந்து கொண்டேன். 5 பேராக ஆரம்பித்து அந்த இயக்கத்தை முடிக்கிற போது 20 தோழர்கள் இருந் தார்கள். சவேரியார்பாளையத்தில் 26 சந்தாக்கள் கிடைத்தன. 18 ஓராண்டுச் சந்தாக்கள், 8 அரையாண்டு சந்தாக்கள்.
பார்க்க வேண்டியவர்கள் பட்டியல் இன்னும் இருந்தது. நான் மட்டும் ரயிலுக்குசெல்வதற்காக கிளம்பி விட்டேன். இதர தோழர்கள் அந்த இயக்கத்தை தொடர்ந்தார்கள். 20 தோழர்கள் அந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக நடப்பதும், வழியில் பார்ப்பவரிடம் நம்மகுடும்பம், நம்ம தீக்கதிர் இயக்கம் என்பதைநினைவுபடுத்திக் கொள்ளவும், பொது வான மக்கள் கூட கம்யூனிஸ்ட் கட்சி பேப்பருக்கு சந்தா வாங்குறாங்க என்றோ, கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிருக்கு சந்தா வாங்குறாங்க என்றோ ஏதோ நம்ம குடும்பம், நம்ம தீக்கதிர் இயக்கம் என்றோ அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தால் கூட காதில் கேட்கிறபோது மன நிறைவான இயக்கமாக இருந்தது. இதுவரையிலும் 139 சந்தாக்களை சேர்த்துள்ளனர். ஐந்தாண்டு சந்தாக்கள் 9, ஓராண்டுச் சந்தாக்கள் 64, ஆறு மாத சந்தாக்கள் 57, மாத சந்தாக்கள் 9 என 139 சந்தா சேர்த்துள்ளனர்.
ஐந்தாண்டு சந்தா முதல் 6 மாத சந்தா வரை கட்சிக்குஅப்பாற்பட்டவர்கள் 49 பேர் கொடுத் திருக்கிறார்கள். 18 பேர் தோல் பதனிடும் தொழிலாளர்கள். 15 பேர்ஆட்டோத் தொழிலாளர்கள். 4 பேர் கட்டுமானத் தொழிலாளர்கள். 39 பேர் முறை சாராத் தொழிலாளர்கள். சலூன், டீக்கடை, பேக்கரி, ஓய்வு பெற்ற ஊழியர்கள் எனஅனைத்து தரப்பினரும் சந்தா அளித்திருக் கிறார்கள். சாதாரணமாக இந்த எண்ணிக்கை உற்சாகப்படுத்தாமல் இருக்கக்கூடும். ஆனால், இந்த இயக்கத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கும், இந்த இயக்கத்தின் இலக்காய் இருந்த கட்சி உறுப்பினர்களுக்கும் இது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது என்பதை அந்த தோழர்களோடு பேசும்போது உணர முடிந்தது.
சந்தா அளிக்க வாய்ப்பில்லாதவர் கூட சந்தா சேகரிப்பு இயக்கத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றதை உணர முடிந்தது. தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேல் திண்டுக்கல் நகரத்தில் அங்குள்ள கிளைச்செயலாளர்களும், இடைக்கமிட்டி உறுப்பினர்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றதென்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.நம்ம பேப்பர், எங்க பேப்பர், கட்சி பேப்பர் என்று தோழர்கள் தொடர்ச்சியாக பேசுவதும், வந்த தோழர்களை வெறுங்கையோடு அனுப்பி விடக்கூடாது என்ப தற்காக எடுத்து கொண்ட முயற்சிகளும், முதல் நாள் தொடங்கும்போது இருந்த நிலையிலிருந்து, அது தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் தோழர் களிடம் உருவாகியிருந்த உற்சாகமும், ஒருங்கிணைப்பும் மிக முக்கியமானது.
இதனினும் சிறந்த, இதை விட அதிகமாக ஒரு குறிப்பிட்ட தினத்தில் சந்தாசேர்த்த, குறிப்பிட்ட பகுதியில் சந்தாசேர்த்த பல அனுபவங்கள் பலருக்கும் இருக்கக்கூடும். ஆனால், கிளைகள், அவர்கள் செயல்படுகிற பகுதியில் கட்சி உறுப்பினரையும், கட்சிக்கு வெளியே நம்முடைய ஆதரவாளர்களையும் தீக்கதிரை வாங்கச் செய்யும் முயற்சியில் எடுத்துக்கொண்ட சிரத்தை, தொடர்ச்சி,வெளிப்பட்ட ஆற்றல் மிகுந்த பாராட்டுக் குரியது, நம்பிக்கையளிக்கக்கூடியது. நம்ம குடும்பம், நம்ம தீக்கதிர் அனுபவத்தை இதை வாசிக்கிற தோழர்கள் நம்ம ஊரில் அமல்படுத்திப் பார்த்தாலென்ன?

நன்றி தீக்கதிர்

ஞாயிறு, 23 ஜூலை, 2017

கபடிக்கு மீண்டும் புத்துயிர்

தீக்கதிர்
சி.ஸ்ரீராமுலு

தமிழர்களின் உணர்வுகளையும், தமிழ்மண்ணின் பெருமைகளையும், பண்பாட்டையும் உலகுக்கு பறைச்சாற்றி தமிழக கிராமங்களின் உயிர்மூச்சாக விளங்குகிறது கபடி. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விளையாட்டு கபடியாகும். பண்டைய கால போர் வீரர்களின் வலிமை, தைரியம், திறமைகள் அனைத்திற்கும் சவாலாய் விளங்குவதும் கபடி போட்டியே.‘‘பலீஞ் சடுகுடு, பலீஞ் சடுகுடு’’ இதுதான் ஆரம்பக் கால தமிழர்களின் கபடி விளையாட்டின் பாடல்வரி. தமிழர்களின் வீர விளையாட்டான கபடி இளைஞர்கள், சிறுவர்கள், ஆண்,பெண் என அனைவரும் விரும்பி ஆடுவதாகும்.
கபடி விளையாட்டு அகில இந்திய அளவில் மட்டுமல்ல, ஆசியாவையும் தாண்டி சர்வதேச அளவில் ‘உலக கோப்பை’ வரை நீடிக்கிறது. கடந்த நூற்றாண்டு வரை புகழின் உச்சியில் இருந்த கபடி, இந்த நூற்றாண்டில் கிரிக்கெட் மோகத்தால் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்றளவும் கிராமங்களின் கோவில் திருவிழா, பண்டிகை நாட்களில் கபடி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசும், முதலமைச்சர் கோப்பை கபடிப்போட்டியை நடத்தி வருகிறது.ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட், ஐசிஎல் கால்பந்து தொடர்களை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு முதல்‘புரோ’ கபடி போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ‘கபடி’ விளையாட்டுக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது.
இதனால் இளைஞர்கள் ஆர்வத்துடன் கபடியை விளையாடி வருகிறார்கள்.கடந்த நான்கு சீசனிலும் 8 அணிகள் பங்கேற்றும், பாரம்பரியமான தமிழகத்திலிருந்து இரண்டு, மூன்று வீரர்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். இந்த முறை 4 அணிகள் புதிதாக இடம்பிடித்துள்ளன. அதில் ஒன்றுதான் தமிழ்நாடு தலைவாஸ். தமிழகத்திலிருந்து 25 வீரர்கள் 12 அணிகளுக்கு தேர்வாகியுள்ளது சிறப்பம்சமாகும். இதில் நெல்லை மாவட்டத்தை சார்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் கலையரசன் குஜராத் அணிக்கும், சேலம் செல்வமணி ஜெய்ப்பூர் அணிக்கும் தேர்வாகியுள்ளனர்.தமிழ் தலைவாஸ் அணியில் தஞ்சையை சேர்ந்த பிரபாகரன், ராஜேஷ் மனோகரன், திருச்சி திவாகரன், அனந்தகுமார் ஆகியோர் முதன் முறையாக களம் புகுகிறார்கள். நல்ல அனுபவம் மிக்க வீரராக திருவாரூர் அருண் இந்த அணியில் உள்ளார்.
கொரியா நாட்டு வீரர்களான டோங் ஜியான் லீ, சன்சிக் பார்க் ஆகியோருடன் பிற மாநிலங்களை சேர்ந்த வினீத் சர்மா, சாரங் அருண் தேஷ்முக், பவாணி ராஜ்புத், பிரபஞ்சன், சுஜித் மகாராணா, அமித்ஹீடா, விஜின் தங்கதுரை, தர்ஷன் தேவாங், மருது, முகிலன், சங்கேத், அனில் குமார், விஜய் குமார் ஆகியோர் இடம்பிடித்திருக்கிறார்கள். அணிக்கு 31 வயதாகும் அஜய் தாகூர் கேப்டனாவார். இவர் இமாச்சல் பிரதேசத்தை சார்ந்தவர் என்றாலும் உலக கோப்பையில் மிக சிறப்பாக விளையாடி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க துணைநின்றவர். இந்திய அணிக்கு பயிற்சி கொடுத்த தஞ்சை மாவட்டம் சூழிக் கோட்டை கி. பாஸ்கரன்தான் தலைவாஸ் அணிக்கு பயிற்சியாளர் என்பது நமது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இந்த மாதம் 28 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் முதல் ஆட்டத்திலேயே தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டான்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது. அக்டோபர் 14ஆம் தேதி நடக்கும் கடைசி லீக் போட்டியில் புனே அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. புரோ கபடியில் சென்னையை மையமாக கொண்டு முதன் முறையாக களம் இறங்கும் ‘தமிழ் தலைவாஸ்’ அணியின் மீது கபடி மட்டுமல்லாமல் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு ரசிகர்களின் புருவங்களை உயர்த்துவதற்கு அச்சாரமாக சென்னை கிண்டியிலுள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடந்த வீரர்கள் அறிமுக நிகழ்ச்சியும் அமைந்திருந்தது. இந்த விழாவில் சென்னை மட்டுமின்றி தென்மாநிலங்களில் இருந்தும் செய்தியாளர்கள், ஊடகவியாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்ததால் அரங்கமே நிரம்பி வழிந்தது.
அணியின் உரிமையாளர்கள் நிம்மகட்டா, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராம்சரண் தேஜா ஆகியோர் வரிசையாக மேடை ஏறினர். அவர்களைத் தொடர்ந்து அணியின் இணை உரிமையாளர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அணியின் விளம்பர தூதர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் பெயரை அறிவித்ததும் அரங்கமே அதிரும் அளவுக்கு கைத்தட்டல், அடங்குவதற்கு நீண்டநேரம் ஆனது.அணியின் சின்னம், வீரர்களின் அதிகாரப்பூர்வ உடை பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களை ஒருசேர மேடையில் அறிமுகப்படுத்தினார்கள்.

திங்கள், 10 ஜூலை, 2017

பொன்னாரின் ஒப்புதல் வாக்குமூலம்

கே கனகராஜ்
நன்றி தீக்கதிர்
கொள்கை வழிநின்று

இந்து அமைப்பினர் தாக்கப்படுவது தொடருமானால் “தமிழகம் கலவர பூமியாக மாறும்” என்று ஞாயிறன்று முழங்கியிருக்கிறீர்கள். இந்து அமைப்பினர் என்று தாங்கள் சொல்வதன் பொருளை இந்துத்துவா அமைப்பினர் என்று மக்கள் புரிந்து கொள்ளாத முறையில் சொல்லியிருக்கிறீர்கள். சமீபத்தில் இந்துத்துவா அமைப்பினர் எங்கே, எதற்காக தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மாறாக, தமிழகத்தில் சமீபகாலங்களில் நடக்கும் தனிப்பட்ட விரோதத்தின் காரணமான தாக்குதல்களை, காவல்துறைக்கு அவகாசம் கொடுக்காமலேயே, இஸ்லாமியர்கள் தான் அந்த தாக்குதல்களை நடத்தினார்கள் என்று அறிக்கை வெளியிடுவதும், அதேபோன்று தற்கொலை செய்து கொண்டவர்களை கொலை செய்யப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதற்கான நோக்கம் மதரீதியான அமைப்புகள் என்று தோன்றும் வகையிலும் தாங்கள் உட்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் பேசி வருகிறீர்கள். இதன் தொடர்ச்சியாக உங்கள் அமைப்பின் ‘கொள்கை’ வழியில் நின்று தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற நீங்கள் திட்டமிட்டிருப்பதையே தங்களின் பேச்சு வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் கலவரங்கள் இல்லாமல் சொத்து அழிப்புகளும், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் கொல்லப்படாமலும், தாக்கப்படாமலும் தாங்கள் ஆட்சிக்கு வந்ததாக காட்ட முடியாது. மற்றவற்றை விடுங்கள். நீங்கள் வெற்றி பெற்றுள்ள நாகர்கோவில் தொகுதியில் மண்டைக்காடு கலவரத்திற்கு பின்பு தான் தங்கள் அமைப்பு காலூன்ற ஆரம்பித்தது என்பதும், அதன் பிறகு இரு மதங்கள் உள்ள எல்லா ஊர்களிலும் ஏதோ ஒரு வகையில் பகைத் தீயை எரிய விட்டிருக்கிறீர்கள் என்பதும் தமிழகம் அறிந்த செய்தி.
அடுத்தது, கோயம்புத்தூர். கலவரங்களின் மூலமாகவும், அழித்தொழிப்புகளின் மூலமாகவுமே உங்கள் அமைப்பை காப்பாற்றி வருகிறீர்கள். திருப்பூரும் அப்படித்தான். எல்லா பிரச்சனைகளையும், அதன் பின்புலத்தையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்காக, சமீபத்தில் தங்கள் கட்சியினரின் அணுகுமுறை குறித்து குறிப்பிட விரும்புகிறேன்.

கற்பனை தலிபான்கள்

கடந்த 2017, ஜூன் மாதம் 22ந் தேதியன்று உங்கள் கட்சியின் இராமநாதபுரம் நகரத்தின் நிர்வாகியாக இருந்த அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தை கடுமையாக தாக்கப்பட்டனர். இது குறித்து தங்கள் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் அஸ்வின்குமார் மற்றும் அவரது தந்தை “முஸ்லீம் பயங்கரவாதிகளால் மிருகத்தனமாக தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று விளம்பியிருக்கிறார். இதேபோன்று நாராயணன் “தமிழக காவல்துறை தலிபான்கள் அதிகம் உள்ள இராமநாதபுரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். சிரமம் இருப்பின் இந்த மாவட்டத்தை மத்திய அரசின் பொறுப்பில் விட்டுவிட்டால் ஒரே மாதத்தில் பயங்கரவாதத்தை வேரோடு அறுக்கும்” என்று தனது ‘நோக்கத்தை’ உண்மை போல வெளியிட்டுள்ளார். கே.டி.ராகவன் “அஸ்வின்குமார் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பல்களால் வெட்டப்பட்டுள்ளார்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இப்படி ஒவ்வொருவரும் வரிந்து கட்டிக்கொண்டு முஸ்லீம்கள்தான், தீவிரவாத அமைப்புகள் தான் அஸ்வினையும் அவருடைய தந்தையையும் வெட்டிவிட்டார்கள், கடை சூறையாடப்பட்டுவிட்டது என்று கொளுத்திபோடுகிறார்கள். இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை என்று நம்புகிற அப்பாவிகள் இருந்தால் என்ன நடந்திருக்கும்... முஸ்லீம்கள் தாக்கப்பட்டிருப்பார்கள், முஸ்லீம் வீடுகள் சூறையாடப்பட்டிருக்கும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட அப்பாவிகள் சிறைக்கு போயிருப்பார்கள்; அல்லது உங்களை அண்டி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். அதை வைத்து நீங்கள் காவிக்கொடியை பறக்க விட்டிருப்பீர்கள். இதுதானே வழக்கம்.
இந்த தாக்குதல் வழக்கில் மணிகண்டன், தஸ்வே ரவி, முத்துராமலிங்கம், தஸ்வே தவசிநாதன் மற்றும் சதீஸ் என 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. இவர்கள் எல்லாம் தலிபான்களா? முஸ்லீம் தீவிரவாதிகளா?

உண்மையை தூக்கிலிட்டவர்கள்

இதேபோன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி திருப்பூரில், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் முத்து என்கிற மாரிமுத்து தூக்கில் பிணமாக தொங்குகிறார். அவருடைய பிணத்தின் கீழே பாஜக கொடி, இந்து முன்னணி கொடி, பிரதமர் மோடியின் படம் மூன்றிற்கும் செருப்பு மாலை போடப்பட்டிருக்கிறது. உங்கள் கட்சியின் தலைவர்கள் இது கொலையென்றும், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென்றும் இந்துத்துவா இயக்க பிரமுகர்கள் இப்படி கொல்லப்படுவது தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் பேசினார்கள். உண்மையில், அந்த படத்தை பார்க்கிற யாருக்கும் மனம் பதை பதைக்கும். தாங்கள் கூட அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், உதவி செய்யவும் வருவதாக பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன. பின்னர், உங்களுடைய அந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் பத்திரிகைகள் வழியாக தெரிந்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு உங்கள் கட்சியைச் சார்ந்த யாரும் முத்து அவர்களின் மரணம் பற்றி எதுவும் பேசியது கிடையாது. ஏனென்றால் இடைப்பட்ட காலத்தில் முத்து சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது அம்பலமானது.
மரியாதைக்குரிய மத்திய இணை அமைச்சர் அவர்களே, அதுவொரு கொலையெனில் அதில் நீங்கள் உறுதியாக இருக்கும்பட்சத்தில் உண்மையான கொலையாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்று கோரியிருக்க வேண்டாமா? அது தற்கொலை தான் என்று தாங்கள் முடிவுக்கு வந்தால் உண்மையில் உங்கள் கட்சி இந்த பிரச்சனையை நேர்மையாக அணுகினால் பாஜக, இந்து முன்னணி கொடிகளுக்கும்,மோடி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமென்று கோரியிருக்க வேண்டாமா? நிச்சயமாக, இதையெல்லாம் செய்து விட்டு முத்து தூக்கில் தொங்கியிருக்க வாய்ப்பில்லை.
இந்த கொலையை முதலில் பார்த்த உங்கள் அமைப்புகளைச் சார்ந்த ஒருவர் குடும்பத்திற்கும், பொதுமக்களுக்கும், போலீசுக்கும் சொல்வதற்கு முன்பாக கொடிகளுக்கும், மோடியின் படத்திற்கும் செருப்பு மாலை அணிவித்து விட்டு சொல்லியிருக்கிறார். எத்தனை நயவஞ்சகம், எத்தனை அழுகிப்போன வக்கிரமான மூளை அது. தொடர் பயிற்சியில்லாமல் மிக நிதானமாக ஒரு பிணத்தின் கீழே இவற்றையெல்லாம் ஒருவரால் நடத்தியிருக்க முடியுமா? உங்கள் அமைப்புகளுக்கு தொடர்பில்லை என்றால் தீய நோக்கத்துடன் இச்செயலை செய்தவரை கண்டுபிடிக்க வேண்டுமென்று நீங்கள் கோரிக்கை வைத்திருக்க வேண்டாமா? இன்று வரை அதை செய்யவில்லையே. இதன் பொருள் என்ன? திட்டமிட்டு மதமோதலை உருவாவதற்கு முயற்சித்திருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?
கடந்த ஆண்டும் திருப்பூரில் பக்ரீத் பண்டிகை அன்று கடையடைப்பு செய்வதற்கு உங்கள் அமைப்பினர் செய்த முயற்சியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சிகளின் துணையோடு முறியடித்தது.

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு போட்ட இந்து முன்னணி

உங்கள் கட்சியில் வளர்ந்து வரும் திண்டுக்கல் நகர தலைவர் ஒருவர், தன் வீட்டில் யாரோ பெட்ரோல் குண்டு வீசி விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். உங்கள் கட்சியினர் கண்டித்தார்கள். ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடைபெற்றது. காவல்துறையும் முடுக்கிவிடப்பட்டது. அப்புறம் தான் தெரிந்தது, உங்கள் கட்சியின் ஒவ்வொரு தலைவரும் ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்கள் பாதுகாப்புடன் அலைவதை பார்த்ததும் தனக்கும் அப்படியொரு பாதுகாப்பிற்காக நாடகம் ஆடினார் என்று.
இது தங்கள் அமைப்புகளுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த கால தங்கள் அமைப்புகளின் செயல்பாட்டிலிருந்தே உங்களிடம் புதிதாக வருபவர்களும் ‘கற்றுக் கொள்கிறார்கள்’.
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ந் தேதியன்று குடியரசு தினத்திற்கு இரண்டு நாள் முன்பு தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடிக்கிறது. குண்டு வெடித்த இடத்தில் முஸ்லீம்கள் அணியும் தொப்பி கிடக்கிறது. தென்காசி அதற்கு முன் பலமுறை மதமோதல்களையும், கொலைகளையும் கண்டிருக்கிறது. 2007ம் ஆண்டு தென்காசியில் மதமோதலில் 6 பேர் கொல்லப்பட்டார்கள். உடனடியாக பதற்றம் பற்றிக் கொள்கிறது. நம்மையெல்லாம் சந்தேகிப்பார்களோ என்று முஸ்லீம் இளைஞர்களுக்கு பதற்றம். நீங்கள் வழக்கமாக பேசுகின்ற "நாங்கள் எல்லாம் இந்துக்கள்" என்பதை நம்புகிற சாதாரண இந்து மனிதனுக்கு எந்தவொரு முஸ்லீமை பார்த்தாலும் இவர்கள் தான் செய்திருப்பார்களோ என்கிற சந்தேகம். இப்படிப்பட்ட ஒரு களம் உங்கள் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு அல்லவா? அது எளிய மனிதர்களுக்கு எங்கே தெரியப் போகிறது? நல்லவேளையாக அப்போதிருந்த காவல்துறையினர் மிகத் தீவிரமாக விசாரித்த பிறகு குண்டு போட்டவர்கள் இந்து முன்னணி அமைப்பினர் என்று கண்டுபிடித்தார்கள். நீதிமன்றமும் அவர்கள் தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்திருக்கிறது.

பொய் சொன்ன சி.சி.டி.வி.

இதேபோன்று இந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதியன்று இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் பாஜக அலுவலகத்தில் ‘அடையாளம் தெரியாத நபர்கள் குண்டு வீசி தாக்குதல்’ நடத்திவிட்டார்கள். ஆனால் 6 மணி 31 நிமிடத்திற்கெல்லாம் ஜெயதேவ் ஹரிந்தரன் நாயர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் திருவனந்தபுரம் பாஜக அலுவலகத்தில் குண்டு வெடித்து விட்டதாக பதிவு செய்திருக்கிறார். அந்த அலுவலகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவை வேலை செய்யவில்லையாம். இதற்கு முன்பும் இப்படி ‘தாக்குதல்’ நடந்த போதும் அந்த சி.சி.டி.வி. கேமராக்கள் வேலை செய்யவில்லையாம். எனவே கலவர பூமியாக்கி விடுவோம் என்று நீங்கள் சொல்வதன் பொருள் தமிழகத்தை பொய்யான மோதல்கள் மூலம், தவறான தகவல்கள் மூலம் கலவர பூமியாக மாற்றுவதற்கு உங்கள் அமைப்பினர் முடிவு செய்திருப்பதாகவே பொருள் கொள்ளத் தோன்றுகிறது.
இதோ, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மாண்புமிகு. மத்திய இணை அமைச்சர் அவர்களே, அதிகாரத்திற்காக பொய்யான தகவல்கள் மூலம், இத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதை உங்கள் அமைப்பு வழக்கமாக வைத்திருக்கிறது. இப்போது நீங்கள் வாக்குமூலமாக சொல்லுவதற்கு முன்வந்திருக்கிறீர்கள். தமிழகத்திற்கு இதையும் எதிர்கொள்ளும் திறன் உண்டு.

வியாழன், 6 ஜூலை, 2017

முந்நூறு ஆண்டுகளில் சாதிக்காததை முப்பது ஆண்டுகளில்...

தீக்கதிர் செய்தி

சீத்தாராம் யெச்சூரி





முந்நூறு ஆண்டுகளில் சாதிக்காததை முப்பது ஆண்டுகளில்..


முந்நூறு ஆண்டுகளில் 
முதலாளித்துவத்தால் சாதிக்கமுடியாததை, சோசலிசத்தின் மூலம் முப்பது ஆண்டுகளில் சோவியத் யூனியன் சாதித்துக் காட்டியது. இது, எதிர்காலத்தில் சோசலிச முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்கிற எண்ணத்திற்கு இட்டுச்சென்றது. சோசலிசத்தால் தோல்விக்கு ஆளாகியுள்ள முதலாளிகள் முன்னிலும் பன்மடங்கு மூர்க்கத்தனத்துடன் திருப்பித்தாக்குவார்கள் என்கிற லெனினிஸ்ட் எச்சரிக்கை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
தவிர்க்கமுடியாதபடி முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்பது தானாய் நடக்கக் கூடிய ஒன்று அல்ல. முதலாளித்துவத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் எதுவும் அதனை சுரண்டலற்ற ஒன்றாகவோ அல்லது நெருக்கடியற்ற ஒன்றாகவோ மாற்றிட முடியாது. முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அதன் பலம் என்ன என்பது குறித்து சரியான மதிப்பீடு அவசியமாகும். அப்போதுதான் அதனைத் தூக்கி எறியக்கூடிய விதத்தில், மார்க்சிய - லெனினியத்தை ஏற்றுக்கொண்டுள்ள கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரமான தத்துவார்த்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக் கொண்டும் வலுப்படுத்திக்கொண்டும் இருப்பது அவசியம் என்பதை உணர்ந்திட முடியும்.
இவ்வாறு ஒரு புரட்சிகரமான கட்சி இல்லாமல் புரட்சிகரமான மாற்றம் சாத்தியமில்லை. சோசலிசத்தின் வல்லமை குறித்து அதீத மதிப்பீடும் கூடாது. முதலாளித்துவத்தின் வல்லமை குறித்து குறைந்த மதிப்பீடும் கூடாது. இவை இரண்டும் ஒரு சரியான ஆய்வினை மேற்கொள்வதற்கும், அதன் காரணமாக இன்றைய உலக நிலைமை குறித்த ஒரு முறையான மதிப்பீட்டை உருவாக்குவதற்கும் அனுமதித்திடாது.சோசலிசம் – ஓர் இடைநிலை மாறுதல்காலம்: மேலும், சோசலிசம் என்பது முன்னேற்றத்தின் முதல்படி என்பதுபோல கருதப்பட்டது. ஒருதடவை சோசலிசத்தை அடைந்துவிட்டோமானால், அதன்பின்னர் எதிர்காலத்தில் எவ்விதத்தடையுமின்றி ஒரு வர்க்கமற்ற, கம்யூனிச சமூகத்தை எய்தும்வரை எவ்விதமானத் தடையும் இல்லாமல் மிகவும் நேரான பாதையாக இருந்திடும் என்று கருதப்பட்டது.
இது ஒரு பிழையான சிந்தனையாகும். அனுபவமும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. சோசலிசம் என்பது ஓர் இடைநிலை மாறுதல் காலம், அல்லது மார்க்ஸ் கூறியதேபோன்று, கம்யூனிசத்தின் முதல் கட்டம்- அதாவது ஒரு வர்க்கப் பிரிவினையுடனான சுரண்டும் முதலாளித்துவ ஒழுங்கிற்கும், வர்க்கமற்ற கம்யூனிச ஒழுங்கிற்கும் இடையேயான இடைநிலை மாறுதல் காலமாகும். எனவே, இந்த இடைநிலை மாறுதல் காலத்தில், வர்க்க மோதல்களை ஒழித்துக்கட்டிவிட முடியாது. மாறாக உலக முதலாளித்துவம் தான் இழந்த ஆட்சிப்பரப்பை மீண்டும் பெறுவதற்கு முயற்சித்திடும் விதத்தில் அவை உக்கிரமடையும். எனவே இக்காலகட்டம் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இருந்திடும்.
அதிலும் குறிப்பாக முதலாளித்துவரீதியாக பின்னடைந்திருந்த புரட்சி நடைபெற்ற நாடுகளில் இந்த நிலைமை இருந்திடும். உலக சோசலிசத்தின் சக்திகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ, சோசலிசக் கட்டுமானத்தில் அடைந்த வெற்றிகளைக் கொண்டும் அதனை ஈட்டிய வர்க்க சக்திகளைச் சரியாக மதிப்பீடு செய்வதைக் கொண்டும் தீர்மானிக்கப்படும். இதனைச் சரியாகச் செய்திடாவிடில், எதிரி குறித்து குறைத்து மதிப்பீடு செய்வதற்கே இட்டுச் செல்லும். அந்த எதிரி சோசலிச நாடுகளில் இருப்பினும் சரி, அல்லது வெளியே இருந்தாலும் சரி. சோசலிசம் குறித்த அதீத மதிப்பீடு என்பதும் சோசலிச நாடுகளில் உருவான பிரச்சனைகள் குறித்து கண்டுகொள்ளாது விடுவதற்கும், உலக முதலாளித்துவம் தன்னை ஒருமுகப்படுத்திக் கொள்வதற்கும் இட்டுச் செல்லும். துல்லியமான நிலைமைகள் குறித்து துல்லியமாக ஆய்வு செய்தல் என்பதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம் என்று மாமேதை லெனின் நமக்கு எப்போதும் நினைவுபடுத்தி வந்துள்ளார்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வு தடுமாற்றம் அடைந்தால், அல்லது எதார்த்த நிலைமை குறித்து சரியான புரிதல் இல்லாமல் தவறிழைத்தோமானால், பின், பிழையான புரிதல்களும் நெறிபிறழ்வுகளும் உண்டாகும். இத்தகைய நெறிபிறழ்வுகள்தான், முக்கியமாக, சோவியத் யூனியனின் பிந்தைய ஆண்டுகளில் மார்க்சிய-லெனினியத்தின் புரட்சிகர சாராம்சத்திலிருந்து விலகல்களும், குறிப்பாக, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது காங்கிரசுக்குப் பின்னர் சோசலிசக் கட்டுமானத்தின்போது தீர்க்கப்படாதிருந்த பிரச்சனைகள் இத்தகைய பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றன.
சோசலிசக் கட்டுமானத்தின்போது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய குறைபாடுகள்
சோசலிசக் கட்டுமானத்தின்போது நான்கு முக்கியமான அம்சங்களில் குறைபாடுகள் நடந்துள்ளன. இதனை விவாதிப்பதற்கு முன்பாக, சோசலிசம் என்பதைக் கட்டும் பணி, மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் நடந்திராத ஒரு பாதையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை, மீண்டும் ஒருமுறை நாம் அடிக்கோடிட்டுக்கொள்வது அவசியமாகும். இதற்கென்று எந்தவிதமான குறிப்பிட்ட சூத்திரமோ அல்லது வரைபடமோ கிடையாது. இத்தகு எதார்த்த உண்மைகளையும் நாம் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்திடும்போது கணக்கில் கொண்டிட வேண்டும்.
அரசின் வர்க்கக் குணம்
மேற்கண்ட நான்கு குறைபாடுகளில், முதலாவது, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்க குணம் சம்பந்தமானதாகும். முந்தைய முதலாளித்துவ அரசமைப்பில் சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களுக்கு எதிராக, பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரமே, அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே, சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்கக் குணமாகும். எனினும், இந்த வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருந்தது. தோழர் ஸ்டாலின் இதற்கான ஓர் அரசியல் அறிக்கையை 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது காங்கிரசில் சமர்ப்பித்தார்.
ஆயினும், சோசலிசம் பல்வேறு கட்டங்களைக் கடந்துசெல்ல வேண்டியிருந்ததால், இத்தகு வர்க்க ஆட்சியின் வடிவங்களையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருந்தது. சோவியத் யூனியன், முதலாளித்துவ நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சூழலில், அல்லது உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சூழலில், சோவியத் யூனியனில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த வடிவத்திலேயே தொடர்ந்து நீடித்திருந்துவிட வேண்டிய அவசியம் தேவையாய் இருக்கவில்லை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் பல்வேறு கட்டங்களையும், சோசலிச அரசின் பல்வேறு வடிவங்களையும், மிகவும் விரிவானமுறையில் 1939இல் நடைபெற்ற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது காங்கிரசின் அரசியல் அறிக்கையில் தோழர் ஸ்டாலின் சமர்ப்பித்தார். இதற்கு ‘சித்தாந்தம் குறித்த கேள்விகள்’ (ணுரநளவiடிளே டிக வாநடிசல) என்று தலைப்பிட்டிருந்தார். எனினும், இவ்வாறு வடிவங்களை மாற்றியமைத்ததை நடைமுறைப்படுத்தும்போது, இதற்கான இயக்கங்களை அரசு அறிவிக்கும்போது அதில் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்பு தேவைப்பட்டது.
இதனை மக்கள் தாமாக முன்வந்து மேற்கொள்வதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தாததன் காரணமாக, அவர்கள் அரசிடமிருந்து தனிமைப்படுவதற்கும், அரசின் மீது அதிருப்தி கொள்வதற்கும் இட்டுச் சென்றது. மேலும், இதே வடிவம் சோசலிச நாடுகள் அனைத்திற்கும் ஒரே சீரான முறையில் அமல்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. அந்தந்த நாட்டின் வரலாறு மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளைத் துல்லியமாக ஆய்வுசெய்வதன் பின்னணியில் தீர்மானிக்கப்பட வேண்டியதாகும்.

வெள்ளி, 23 ஜூன், 2017

மோடிக்கு காவடி தூக்கும் அதிமுக கோஷ்டிகள்


மோடிக்கு காவடி தூக்கும் அதிமுக கோஷ்டிகள்ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்ட உடனேயே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கோஷ்டி ஆதரவு தெரிவித்தது. அடுத்தடுத்து பன்னீர்செல்வம் கோஷ்டியும், டி.டி.வி. தினகரன் தலைமையிலான கோஷ்டியும் ஆதரவு தெரிவித்துள்ளன.அறிவிப்பு செய்ததோடு தில்லிக்குச் சென்று நேரடியாக ஆதரவு தருகிறோம் என்று அறிவிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு கோஷ்டிகள் தில்லிக்கு புறப்பட்டுள்ளன. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடந்த போது பன்னீர்செல்வம் கோஷ்டியினர் எதிர்த்து வாக்களித்தனர்.
பிறகு இரண்டு கோஷ்டிகளும் இணைவதற்காக பேச்சுவார்த்தைக்குழுக்கள் அமைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பழனிசாமி தலைமையிலான கோஷ்டி, சசிகலா தலைமையில் செயல்படுவதாக குற்றம்சாட்டி சமீபத்தில் பேச்சுவார்த்தைக்குழுவை கலைத்து இணைவதற்கான வாய்ப்பில்லை என்று பன்னீர் செல்வம் அறிவித்தார். தினகரன் தில்லி திகார் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த போது ஒரு பகுதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது அதிமுக மூன்று கோஷ்டிகளாக பிளவுபட்டு நிற்கின்றது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பிளவுபட்ட அதிமுக கோஷ்டிகள் கட்சித் தலைமையை, ஆட்சித் தலைமையை தக்க வைப்பதற்கும், பிடிப்பதற்கும் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இக்கோஷ்டிகளுக்குள் முட்டல், மோதல்கள் இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சிக்கும், ஆட்சிக்கும் காவடி தூக்குவதில் நீ முந்தி, நான் முந்தி என போட்டி போடுகின்றன. தமிழக மக்கள் நலன் குறித்து இக்கோஷ்டிகளுக்கு கவலை கிடையாது. மோடி தலைமையில் ஆட்சியமைந்ததிலிருந்தே அடுக்கடுக்காக மத்திய அரசு தமிழக மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. உச்சநீதிமன்றமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று முடிவெடுத்த போது உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்று மோடி அரசு தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டது.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரிய மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு தில்லிக்கு மாநில அரசு அனுப்பியது. ஆனால் பாஜக அரசு மாநில அரசின் மசோதாவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்ததோடு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப மறுத்து கிடப்பில் போட்டுவிட்டது.வர்தா புயல் மற்றும் வறட்சி நிவாரணத்திற்காக மாநில அரசு கோரியது ரூ. 61 ஆயிரம் கோடி. மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது சொற்பத் தொகையே. இதைப்பற்றி கூட அதிமுக கோஷ்டிகள் வாய் திறக்க மறுத்து விட்டன. சமீபத்தில் தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து பல திட்டங்களுக்காக தமிழகத்திற்கு சேர வேண்டிய சுமார் ரூ. 17 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கிட வேண்டுமென்று மாநில முதலமைச்சர் மனு கொடுத்தார். பிரதமரோ எதுவும் செய்யவில்லை.
இதுபற்றியும் முதலமைச்சர் மவுனம் சாதிக்கிறார்.மாநில உரிமைகளை பறிக்கக் கூடிய மற்றும் வகுப்புவாத நோக்கத்தோடு பசு, எருது, எருமை, ஒட்டகம் போன்ற விலங்குகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்தது. எதிர்க்கட்சி முதலமைச்சர்களும், எதிர்க்கட்சிகளும், ஏன் நாடே மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்தது. அதிமுக கோஷ்டிகள் வாய் அடைத்து நிற்கின்றன.கழகங்கள் இல்லாத தமிழகம் என மூச்சுக்கு மூச்சு தமிழக பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். இது கூட இந்த கோஷ்டிகளுக்கு உறைக்கவில்லை.
உதய் திட்டம், உணவுப்பாதுகாப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டம், 100 நாள் வேலைக்கு ஒதுக்கீடு வெட்டு போன்றவை பற்றி இந்த கோஷ்டிகளுக்கு கவலையே கிடையாது. பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகிதம் குறைந்ததற்கு பண மதிப்பு நீக்க திட்டம் தான் என நடுநிலையான வல்லுநர்களே கருத்து தெரிவித்துள்ளனர். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வமோ, இன்று முதலமைச்சராக இருக்கிற பழனிசாமியோ இதுபற்றி வாய்திறக்கவில்லை?இப்போது இந்தி, எதிர்காலத்தில் சமஸ்கிருதம் என மத்திய அரசாங்கம் இந்தி பேசாத மாநில மக்கள் மீது மொழித் திணிப்புக்கு முயற்சிக்கிற போது பெரியார், அண்ணாவை இப்போதும் பெரிதும் போற்றுவதாக பேசி வரும் அதிமுக கோஷ்டிகள் ஏன் கண்டிக்கவில்லை?
பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்த பிறகு மத்திய அரசின் வழிகாட்டுதலில் செயல்படக் கூடிய பல ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவைகளில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை நியமித்து இந்துத்துவாவை நிலைநாட்டுவதற்கு மோடி பகீரத முயற்சி எடுத்து வருகிறார். எல்லா துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நியமித்து ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் என்ற நிலைமையை உருவாக்கிய மோடி அரசு தற்போது குடியரசுத் தலைவராகவும் ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி தான் வர வேண்டுமென்ற நோக்கத்தோடு ராம்நாத் கோவிந்த் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு என்ற உள்ளடக்கத்தை கொண்ட அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொன்றாக மீறி வரும் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பவர் தான், ஆமாம் சாமி போடுபவர் தான் குடியரசுத் தலைவராக வர வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ்.சும் மோடி தலைமையிலான அரசும் கருதுகின்றன.
இதை எதிர்த்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் புதல்வி, முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளன. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அதிகாரங்களை பயன்படுத்தி எப்போது தங்களது வீடுகளிலும், அலுவலகங்களிலும் ரெய்டு வந்துவிடுமோ என்று நிரந்தரமான அச்சத்திலும், பதற்றத்திலும் உள்ள அதிமுக கோஷ்டிகள் பாஜக தலைமையிடம் சரணாகதி அடைந்துவிட்டன.

இது மதச்சார்பின்மைக்கும், தமிழக மக்கள் நலனுக்கும் இக்கோஷ்டிகள் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை பாதுகாக்கவும், மாநில அரசு - அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு ஊழல் சாம்ராஜ்யத்தை தொடரவும் வேண்டுமென்பது தான் இந்த கோஷ்டிகளின் நோக்கம் என்பது தெளிவாகிவிட்டது. வெட்கக் கேடு.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலில் BJP-யின் வேட்பாளரை அவர்களது NDA கூட்டாளிகள் ஆதரித்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதிமுக, YSR காங்கிரஸ்( ஜெகன்),TRS (சந்திரசேகர ராவ்-தெலங்கானா) ஆகியோர் ஆதரித்ததன் அர்த்தம் என்ன?
இந்த கட்சிகளின் ஆதரவுதான் BJPக்கு அப்பட்டமாக ஒரு வலதுசாரி வேட்பாளரை தேர்வு செய்ய தைரியம் தந்தது.வெற்றி நிச்சயம் என்ற நிலை உருவானது. இந்த கட்சிகள் அடிப்படையில் ஒரு வலதுசாரிகள் என பெயரிட முடியாது. பின்ன ஏன்?என்ன நடந்தது.
கடந்த 25ஆண்டுகளாக நவீன தாராளமய சூழல் இந்த கட்சிகளின் வர்க்க குணத்தை மாற்றி இருக்கிறது. இந்த கட்சிகளின் தலைவர்கள்-ஜெயலலிதா&கோ, ராஜாசேகர ரெட்டி&கோ, சந்திரபாபு நாயுடு+சந்தரசேகர ராவ்& கோ, ஆகியோர் வரன்முறையில்லா கொள்ளை ( Cronyism) நடத்த வாய்ப்பு கிடைத்தது. இந்த கொள்ளையை பாதுகாப்பது தவிர வேறு என்ன தத்துவ சங்கமம் பிஜேபி-க்கும் இவர்களுக்கும் இடையே நடந்தது.
ஆகவே தான் கோவிந்த்-அவர்களை எதற்காக ஆதரிக்கிறோம் எனக்கூட இவர்களால் கூற முடியவில்லை. CBI/வருமானவரி துறையின் அமலாக்க பிரிவு கடந்த சில காலமாக இந்த வேலைக்கு கனகச்சிதமாக பயன்படுத்தப் பட்டது. அதிமுக,தமிழகம் எவ்வளவு வஞ்சிக்கபட்டாலும் பரவாயில்லை நாங்கள் "நிர்வாண ஆதரவு" நிலை எடுப்போம் என்றானது.
ஆனால் BJP-RSS வகையறாக்களுக்கு தனது ஒற்றை அஜண்டாவை நகர்த்த எந்த அதர்மத்தை செய்யலாம் என புதிய கீதையை கைவசம் வைத்துள்ளது.

ஞாயிறு, 18 ஜூன், 2017

சிபிஎம் அலுவலகம் மீது குண்டுவீச்சு: கோபாவேச ஆர்ப்பாட்டம்



 தீக்கதிர் செய்தி

 திருப்பூர், ஜூன் 17 -

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதுபெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளைக் கைது செய்யவும், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் பல்வேறு இடங்களில் கோபாவேச ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் காந்தி சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில்திமுக மாநகரச் செயலாளர் மேங்கோ பழனிசாமி, மனோகர் பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.காளியப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன், காங்கிரஸ் வட்டார தலைவர் வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் பேசினர்.திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி தலைமை வகித்தார்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியன் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.ஆர்.நடராஜன், திமுக சார்பில் காந்தி, தமாகா சார்பில் செழியன், காங்கிரஸ் சார்பில் ராமசாமி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் அ.புதூர் சிக்னல் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரக்குழு உறுப்பினர் வி.பி.சாமிநாதன் தலைமைவகித்தார். இதில் நகரச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.ராஜேந்திரன், திமுகசார்பில் செயலாளர் கொ.ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடராஜ், தேமுதிக சார்பில்செல்வகுமார், காங்கிரஸ் சார்பில் சிவசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
தாராபுரத்தில் அண்ணாசிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நலஅமைப்பின் நிர்வாகி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அனைத்து பகுதிகளிலிருந்து பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை ஒன்றிய செயலாளர் ஏ.துரைசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம், சிபிஐஆனைமலை ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.சுந்தரசாமி, சிஐடியு மாநில துணை செயலாளர் எம்.கனகராஜ், விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.கே.பட்டீஸ்வரமூர்த்தி, வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பி.கருத்தோவியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆனைமலை ஒன்றிய செயலாளர் சி.கம்பர், அ.அப்பன்குமார், தொழிலாளர்கள் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் ப.சந்திரசேகர், க.தர்மராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் த.தமிழ்,தமுமுக கோவை தெற்கு மாவட்ட துணை செயலாளர் முகமது மைதீன், ஆனைமலை நகர செயலாளர் சாகுல் அமீது, இந்திய தேசிய காங்கிரஸ் நகர செயலாளர் ப.நஜுமுதியன், மனிதநேய மக்கள் கட்சியின் ஆனைமலை நகர செயலாளர் சர்தார் உசேன் உள்ளிட்ட பங்கேற்று கண்டன உரையாற்றினர். இதில் 100க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டம், கூடலூர் அம்பலமூலா பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யோகண்னா தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் வி.டி.ரவீந்திரன் கண்டன உரையாற்றினார். சிஐடியு தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.கே முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும், எருமாடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் இடைகமிட்டிஉறுப்பினர் திலிப் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் அமீது மாஸ்டர் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

சிபிஎம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோவையில் அனைத்துக் கட்சிகள் ஆவேசம்

தீக்கதிர் செய்தி 
கோயம்புத்தூர். ஜூன் 17 –
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் செயல் பட்டு வருகின்றது. இந்த அலுவலகம் மீதுசனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது பட்டு கீழே விழுந்து குண்டு வெடித்துள்ளது. இதில்காரின் ஒரு பகுதி மற்றும் அலுவலக ஜன்னல்பகுதி சேதமானது. இந்த சம்பவத்தை யறிந்து கட்சியின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆவேசத் துடன் கட்சி அலு வலகத்தில் குவிந்தனர்.
இதனைத்தொடர்ந்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை தடவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்துச்சென்றனர். மோப்ப நாய்களைவரவழைத்தும் சோதனை மேற்கொண்ட னர். மேலும், அருகில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அஞ்சமாட்டோம்
குண்டுவீச்சு சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது;கோவையில் மக்கள் ஒற்றுமைக் காகவும், மதநல்லிணக்கத்திற்காகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயராது செயல்பட்டு வருகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் மதவெறி சக்திகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தபோது மார்க்சிஸ்ட் கட்சி கோவையின் தொழில் அமைதி மற்றும் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும், கலவரம் ஏற்படும் சூழலை தடுக்கவும் உடனடியாக மக்களைத் திரட்டி போராட்டக்களம் கண்டு வருகிற இயக்கமாக, கோவையின் அமைதிக்கு குரல் கொடுக்கும் கட்சியாக திகழ்கிறது. இந்நிலையில் இந்துத்துவா மதவெறி அமைப்புகள் நாட்டின் பல பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மற்றும்கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு தில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே கோவையில் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதாக கருதுகிறோம். இந்துத்துவா மதவெறி சக்திகளின் இம்மாதிரியான மிரட்டல்களுக்கு உழைப்பாளி மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் என்றும் அஞ்சியது இல்லை. தொடர்ந்து மதவெறி சக்திகளை தனிமைப்படுத்த தொடர்ந்து செயல்படுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகள் கண்டனம்
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீதான குண்டு வீச்சு செய்தியை அறிந்து திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் முற்போக்கு, தலித்அமைப்புகளின் தலைவர்களும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து, வன்முறையாளர்களின் செயலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
அனைத்துக்கட்சியினர் ஆவேச ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் குண்டு வீச்சுசம்பவத்தை கண்டித்து கோவையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆவேசத்தோடு பங்கேற்று வன்முறையாளர்களை கைது செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர். கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, முத்துசாமி, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநிலப்பொருளாளர் எம்.ஆறுமுகம், சிபிஐ(எம்எல்) லிபரேசன் தமிழகம் மாவட்டச் செயலாளர் பெரோஷ்கான், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சேதுபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன், மண்டல செயலாளர் சுசி.கலையரசன் மற்றும் திக, பெரியார் திக, தலித் மற்றும் முற்போக்கு அமைப்புகளின் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மக்கள் விரோத கொள்கையை நடத்தும் மோடி அரசு, மக்களின் கவனத்தை திசைதிருப்ப சங்பரிவார் அமைப்புகளை தூண்டிவிட்டு இதுபோன்ற வன்முறை செயல்களை செய்வதாகவும், இந்துத்துவ சக்திகளின் வெறியாட்டத்தை செங்கொடி இயக்கம் முறியடிக்கும் என்றும் ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை, ஜூன் 17 -
கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ள மதவாத சக்திகளைதமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றுதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும் கோவை காந்திபுரம் பகுதியிலேயே இப்படியொரு தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்றால் இதை மறைமுகமாக, மர்ம நபர்கள் தொடுத்த தாக்குதல் என்றுசொல்ல முடியாது;
துணிந்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.நாட்டிற்குப் பேராபத்தாய் இன்று தலைதூக்கியிருக்கும் மதவாதத்தை எதிர்ப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது, முன்னணியிலும் நிற்கிறது. அதனால் மதவாத சக்திகள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.கோவையில் சத்ரபதி சிவாஜி விழாவுக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் இந்தத் தாக்குதலும் நடைபெற்றிருக்கிறது. இந்தத்தாக்குதலை ஒரு அச்சுறுத்தும் நிகழ்ச்சியாக, மிரட்டும் முயற்சியாகப் பார்க்க வேண்டியதில்லை. பின்னர் ஏற்படப்போகும் பேராபத்தின் அச்சாரமாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில், இதனை எதிர்கொள்ள தமிழக மக்கள் தயாராக வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவி அழைக்கிறது. அதே நேரம் இந்தத் தாக்குதலைத் தொடுத்த மதவாதக் கும்பலை தமிழ்ச்சமூகத்தில் ஒட்டிக் கொண்டுள்ள புல்லுருவிகளாகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி பார்க்கிறது.எனவே, தமிழ்ச் சமூக“வளர்ச்சி”க்குக் கேடாக இருக்கும் இந்தக் குற்றவாளிகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை உடனடியாகவே மேற்கொள்ளுமாறு தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 16 ஜூன், 2017

#இதுவெறும்பதிவல்ல

சமூக அடுக்குகளிலும் பொருளாதார அடுக்குகளிலும், அடிமூட்டையாய் இருக்கும் எமது துப்பரவு தொழிலாளர்கள். நமது சிங்கார சென்னையில் இவர்கள் அனைவரும் "செங்கொடி சங்க'உறுப்பினர்கள் .சங்க பெயரே அப்படி தான் உள்ளது. சுமார் 15,000பேர் தினகூலிகள்,தற்காலிக i- அத்தகூலிகள். எமது செங்கொடி சங்கம் கடந்த சில ஆண்டுகளாக இவர்களை காப்பாற்ற களமிறங்கியது. வேலைநிறுத்தம், மறியல், தர்ணா, பெரும்திரள் முறையீடு என அனைத்து விதமான போராட்டங்களையும் நடத்தியது்.2013-மாநகராட்சி தீர்மானம்.கடந்த பிப்ரவரி போராட்டத்தின் போது பணிவரன்முறை செய்வதாக அரசு எழுத்துபூர்வ ஒப்பந்தம். ஆனால் எதையும் அமல்படுத்த வில்லை.இதற்கிடையில் 15 தொழிலாளர்கள் இறந்து விட்டனர்.
ஆகவே மீண்டும் ஜுன் 14 அன்று போராட்டம் துவங்கியது.சட்டசபை வேறு கூடிவிட்டது. இதற்கு தான் சமயம் பார்த்து கொண்டு இருந்தோம். இரவு பகலாக கஞ்சி இல்லாமல் "காத்திருக்கும்"போர் .ரிப்பன் மாளிகை யில் உள்ளிருப்பு போராட்டம். நேற்று நள்ளிரவு வெற்றியோடு நிறைவடைந்து.NMR தொழிலாளர்கள் 908 பேர் நிரந்தரம் பெற்றனர். இந்த 'நிரந்தரம்' வார்த்தையாக வாசித்து கடந்து விட கூடாது. அது அவர்களது ஜீவன், இதுகால் ஒட்டி கொண்டு இருந்த அவமானம் அழிக்க பட்டது என அர்த்தம். மீதியுள்ள அத்தகூலிகளாக ரூ.100க்கும், ரூ.200க்கும் கூலிஅடிமைகளாக ஊர் மவுசு பேசும்"ஒப்பந்தக்கார்"களிடமிருந்தும் விடுதலை. கூலி ரூ.348 முதல் 500வரை மாநகராட்சியே நேரடியாக வழங்க ஏற்பாடாகியுள்ளது.
இதற்கு தலைமை தாங்கி- அவர்களில் ஒருவராய் ஆகிப்போன தோழர். எல்.சுந்தர் ராஜன். இப்ப இவர்தான் சிபிஎம் வ.சென்னை மாவட்ட செயலாளர். சிஐடியூ-வில் இவரது களம் இந்த பாவபட்ட கூலிகளே. இவரோடு தோழர்கள். சீனிவாசலு,டி.ராஜன், ஜி.முனுசாமி,வி.சரவணன் என இந்த சிங்காரவேலரின் வாரிசு பட்டியல் நீளும். இவர்களை எப்படி பாராட்டுவது-வார்த்தைகள் இல்லை என்னிடம்.
முகநூல் நண்பர்களின் ரசனைகள் குறித்து ரெம்ப தெரியாது. இதுவே எமது மார்க்கமென மார்பு தட்டி கொண்டாட யாராவது என்னோடு வந்தால் போதும்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கூட்டம் மற்றும் வெளிப்புறம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நடக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்