<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

ஞாயிறு, 18 ஜூன், 2017

சிபிஎம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு கோவையில் அனைத்துக் கட்சிகள் ஆவேசம்

தீக்கதிர் செய்தி 
கோயம்புத்தூர். ஜூன் 17 –
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் செயல் பட்டு வருகின்றது. இந்த அலுவலகம் மீதுசனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது பட்டு கீழே விழுந்து குண்டு வெடித்துள்ளது. இதில்காரின் ஒரு பகுதி மற்றும் அலுவலக ஜன்னல்பகுதி சேதமானது. இந்த சம்பவத்தை யறிந்து கட்சியின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆவேசத் துடன் கட்சி அலு வலகத்தில் குவிந்தனர்.
இதனைத்தொடர்ந்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை தடவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்துச்சென்றனர். மோப்ப நாய்களைவரவழைத்தும் சோதனை மேற்கொண்ட னர். மேலும், அருகில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அஞ்சமாட்டோம்
குண்டுவீச்சு சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது;கோவையில் மக்கள் ஒற்றுமைக் காகவும், மதநல்லிணக்கத்திற்காகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயராது செயல்பட்டு வருகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் மதவெறி சக்திகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தபோது மார்க்சிஸ்ட் கட்சி கோவையின் தொழில் அமைதி மற்றும் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும், கலவரம் ஏற்படும் சூழலை தடுக்கவும் உடனடியாக மக்களைத் திரட்டி போராட்டக்களம் கண்டு வருகிற இயக்கமாக, கோவையின் அமைதிக்கு குரல் கொடுக்கும் கட்சியாக திகழ்கிறது. இந்நிலையில் இந்துத்துவா மதவெறி அமைப்புகள் நாட்டின் பல பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மற்றும்கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு தில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே கோவையில் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதாக கருதுகிறோம். இந்துத்துவா மதவெறி சக்திகளின் இம்மாதிரியான மிரட்டல்களுக்கு உழைப்பாளி மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் என்றும் அஞ்சியது இல்லை. தொடர்ந்து மதவெறி சக்திகளை தனிமைப்படுத்த தொடர்ந்து செயல்படுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகள் கண்டனம்
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீதான குண்டு வீச்சு செய்தியை அறிந்து திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் முற்போக்கு, தலித்அமைப்புகளின் தலைவர்களும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து, வன்முறையாளர்களின் செயலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
அனைத்துக்கட்சியினர் ஆவேச ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் குண்டு வீச்சுசம்பவத்தை கண்டித்து கோவையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆவேசத்தோடு பங்கேற்று வன்முறையாளர்களை கைது செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர். கோவை சிவானந்தகாலனி பவர்ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, முத்துசாமி, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநிலப்பொருளாளர் எம்.ஆறுமுகம், சிபிஐ(எம்எல்) லிபரேசன் தமிழகம் மாவட்டச் செயலாளர் பெரோஷ்கான், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், சேதுபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன், மண்டல செயலாளர் சுசி.கலையரசன் மற்றும் திக, பெரியார் திக, தலித் மற்றும் முற்போக்கு அமைப்புகளின் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மக்கள் விரோத கொள்கையை நடத்தும் மோடி அரசு, மக்களின் கவனத்தை திசைதிருப்ப சங்பரிவார் அமைப்புகளை தூண்டிவிட்டு இதுபோன்ற வன்முறை செயல்களை செய்வதாகவும், இந்துத்துவ சக்திகளின் வெறியாட்டத்தை செங்கொடி இயக்கம் முறியடிக்கும் என்றும் ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை, ஜூன் 17 -
கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ள மதவாத சக்திகளைதமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றுதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும் கோவை காந்திபுரம் பகுதியிலேயே இப்படியொரு தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்றால் இதை மறைமுகமாக, மர்ம நபர்கள் தொடுத்த தாக்குதல் என்றுசொல்ல முடியாது;
துணிந்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.நாட்டிற்குப் பேராபத்தாய் இன்று தலைதூக்கியிருக்கும் மதவாதத்தை எதிர்ப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது, முன்னணியிலும் நிற்கிறது. அதனால் மதவாத சக்திகள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.கோவையில் சத்ரபதி சிவாஜி விழாவுக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் இந்தத் தாக்குதலும் நடைபெற்றிருக்கிறது. இந்தத்தாக்குதலை ஒரு அச்சுறுத்தும் நிகழ்ச்சியாக, மிரட்டும் முயற்சியாகப் பார்க்க வேண்டியதில்லை. பின்னர் ஏற்படப்போகும் பேராபத்தின் அச்சாரமாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில், இதனை எதிர்கொள்ள தமிழக மக்கள் தயாராக வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவி அழைக்கிறது. அதே நேரம் இந்தத் தாக்குதலைத் தொடுத்த மதவாதக் கும்பலை தமிழ்ச்சமூகத்தில் ஒட்டிக் கொண்டுள்ள புல்லுருவிகளாகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி பார்க்கிறது.எனவே, தமிழ்ச் சமூக“வளர்ச்சி”க்குக் கேடாக இருக்கும் இந்தக் குற்றவாளிகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை உடனடியாகவே மேற்கொள்ளுமாறு தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக