<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

‘நம்ம குடும்பம், நம்ம தீக்கதிர்’
க.கனகராஜ்,முதன்மைப் பொதுமேலாளர், தீக்கதிர்.

அவர்கள் அதை என்னிடம் சொன்னபோது எனக்கு நம்பிக்கையோ, உற்சாகமோ வரவில்லை. ஆயினும், எதுவுமே நடக்காதபோது இப்படி முயற்சித் தாலென்ன? என்கிற ஒரே ஒரு காரணம் மட்டுமே அவர்கள் சொன்னதை மறுத்து சொல்லாமல் இருந்ததற்கு காரணமாக இருந்தது. தீக்கதிர் மதுரை பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரனும், நிர்வாக மேலாளர் ராஜ்மோகனும், தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு செயலாளர் என். பாண்டியுடன் பேசியதை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
“தீக்கதிரை நம் கட்சி உறுப்பினர்களிடம் மட்டுமன்றி கட்சி உறுப்பினர்களது குடும்பங்களின் நேசிப்பாகவும் மாற்ற ஒரு முயற்சி எடுக்கலாம், ‘நம்ம குடும்பம், நம்ம தீக்கதிர்’ என்ற பெயரில் கட்சி உறுப்பினர்குடும்பம் ஒவ்வொன்றையும் தீக்கதிர் வாங்கவேண்டுமென்று நேரடியாக சந்தித்து வேண்டுகோள் விடுக்கலாம். திண்டுக்கல் நகரத்தில் மட்டும் சுமார் 500 கட்சி உறு ப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒருமுறை நேரடியாக சந்திப்பதற்கு இதுவொரு வாய்ப்பு. குடும்பத்தினரை சந்திப்பதற்கும் ஒரு வாய்ப்பு ”என்று அவர்கள் என்னிடம் சொன்னபோது இதனால்பலன் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் மறுத்துச் சொல்லவில்லையே தவிர அதை நோக்கி முன்தள்ள நான் முயற்சிக்கவில்லை. 24-7-2017 அன்று தீக்கதிர் நிர்வாகஉபகுழு கூட்டம் மதுரையில் நடைபெறு வதாக இருந்தது.
நம்ம தீக்கதிர், நம்மகுடும்பம் இயக்கத்தை துவக்கி வைத்து விட்டு மதுரைக்கு வந்து விடுங்கள் என்றுஅவர்களே நிர்ணயித்த ஒரு அட்ட வணையையும் என்னிடம் கூறினார்கள். மதுரையில் வைக்கிற கூட்டத்தை திண்டுக் கல்லில் வைத்துக் கொள்ளலாம் எனமுடிவு செய்து அன்றைய தினம் காலையில் இந்த இயக்கத்தை துவக்குவதாக இருந்தோம். காலை 7.45 மணிக்குதான் அதுதுவங்கியது. மாவட்டக்குழு செயலாளர் பாண்டி, திண்டுக்கல் நகரக்குழுவின் செயலாளர் பி.ஆசாத் இவர் களோடு மாவட்ட நிருபர் இல.முருகேசன் ஆகியோர் சொல்கிற இடத்திற்கு நானும் சென்றேன்.அய்யன்குளம் கிளைத் தோழர்கள் காலை 6 மணிக்கு கூடி, நாங்கள் செல்ல தாமதம் ஆனதால் கலைந்து சென்று விட்டார்கள். நாங்கள் போன பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.
மிகவும் சிரமப்படுகிற, பொருளாதார நெருக்கடி யிலிருக்கிற தோழர்களைக் கொண்ட கிளை அது. பத்திரிகைக்காக ஒரு நாளைக்கு 5 ரூபாய் செலவழிக்க முடியாதா? என்றகேள்வியை முன்வைத்த போது,முகத்தில் அறைவது போல, அதற்கு கூட வாய்ப்பு இல்லாத நிலையைமிகுந்த தயக்கத்தோடு தோழர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த தோழர்களுக்கு, “பொறுப்பிலிருக்கிற தோழர்கள் வந்திருக்கிறார்கள். வெறுங்கையோடு அனுப்பக்கூடாது” என்கிற மனநிலை தொற்றிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. எனவே, அங்கும் இங்குமாக தேடியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் 2 ஆண்டுச் சந்தாக்களையும், 2 ஆறுமாதச் சந்தாக்களையும் பிடித்துக் கொடுத்தார்கள்.
இந்த எண்ணிக்கை நிச்சயமாக யாரையும் உற்சாகப்படுத்திவிட முடியாது. ஆனால் இந்த எண்ணிக்கையைத் தாண்டி தோழர்கள் காட்டிய ஆர்வமும், அவர்கள் நடந்து கொண்ட விதமும் மிகப்பெரிய உந்துசக்தியாக மாறிப்போனது. உற்சாகங்கள் எப்போதுமே மேலிருந்துமட்டுமே செலுத்தப்பட வேண்டுமென்ப தில்லை. பொறுப்பில் இருப்பவர்கள், ஆரம்ப நிலையில் இருக்கக்கூடிய தோழர்களிடமிருந்து பீறிட்டு எழும் உற்சாகத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதை அது உணர்த்தியது. அதற்குப்பின்பு 7-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக தினசரி காலையிலும், சிலநேரம் மாலையிலுமாக இது தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும் தீக்கதிரிலிருந்து மதுக்கூர் ராமலிங்கம், எஸ்.பி.ராஜேந்திரன், ராஜ்மோகன், உமாபதி, ஜெயராஜ் என்றுயாராவது ஒரு தோழர் எனக் கலந்து கொண்டார்கள்.
மாவட்டக்குழு செயலாளர் பாண்டியும், நகரக்குழு செயலாளர் ஆசாத்தும், தீக்கதிர்மாவட்ட நிருபர் இல.முரு கேசனும் தொடர்ச்சியாக கலந்து கொண்டார்கள். கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்ற 4-ஆம் தேதி தவிர அனைத்து தினங்களிலும் இந்த இயக்கம் நடைபெற்றுள்ளது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ஆர்.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர் பிரபாகரன், நகர்குழு உறுப்பினர்கள் அரபு முகமது, கே.எஸ்.கணேசன், நடராஜன்,வின்சென்ட், தவகுமார், சி.பி.ஜெயசீலன், பிச்சைமுத்து, அருள்ஜோதி, எஸ்.ஜோதிபாசு உள்ளிட்ட தோழர்கள்வெவ்வேறு தினங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.ஆகஸ்ட் 5ஆம் தேதி மாலை சவேரியார்பாளையத்தில் 11வது நாள் நடைபெற்ற சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மீண்டும் ஒருமுறை நான் கலந்து கொண்டேன். 5 பேராக ஆரம்பித்து அந்த இயக்கத்தை முடிக்கிற போது 20 தோழர்கள் இருந் தார்கள். சவேரியார்பாளையத்தில் 26 சந்தாக்கள் கிடைத்தன. 18 ஓராண்டுச் சந்தாக்கள், 8 அரையாண்டு சந்தாக்கள்.
பார்க்க வேண்டியவர்கள் பட்டியல் இன்னும் இருந்தது. நான் மட்டும் ரயிலுக்குசெல்வதற்காக கிளம்பி விட்டேன். இதர தோழர்கள் அந்த இயக்கத்தை தொடர்ந்தார்கள். 20 தோழர்கள் அந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக நடப்பதும், வழியில் பார்ப்பவரிடம் நம்மகுடும்பம், நம்ம தீக்கதிர் இயக்கம் என்பதைநினைவுபடுத்திக் கொள்ளவும், பொது வான மக்கள் கூட கம்யூனிஸ்ட் கட்சி பேப்பருக்கு சந்தா வாங்குறாங்க என்றோ, கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிருக்கு சந்தா வாங்குறாங்க என்றோ ஏதோ நம்ம குடும்பம், நம்ம தீக்கதிர் இயக்கம் என்றோ அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தால் கூட காதில் கேட்கிறபோது மன நிறைவான இயக்கமாக இருந்தது. இதுவரையிலும் 139 சந்தாக்களை சேர்த்துள்ளனர். ஐந்தாண்டு சந்தாக்கள் 9, ஓராண்டுச் சந்தாக்கள் 64, ஆறு மாத சந்தாக்கள் 57, மாத சந்தாக்கள் 9 என 139 சந்தா சேர்த்துள்ளனர்.
ஐந்தாண்டு சந்தா முதல் 6 மாத சந்தா வரை கட்சிக்குஅப்பாற்பட்டவர்கள் 49 பேர் கொடுத் திருக்கிறார்கள். 18 பேர் தோல் பதனிடும் தொழிலாளர்கள். 15 பேர்ஆட்டோத் தொழிலாளர்கள். 4 பேர் கட்டுமானத் தொழிலாளர்கள். 39 பேர் முறை சாராத் தொழிலாளர்கள். சலூன், டீக்கடை, பேக்கரி, ஓய்வு பெற்ற ஊழியர்கள் எனஅனைத்து தரப்பினரும் சந்தா அளித்திருக் கிறார்கள். சாதாரணமாக இந்த எண்ணிக்கை உற்சாகப்படுத்தாமல் இருக்கக்கூடும். ஆனால், இந்த இயக்கத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கும், இந்த இயக்கத்தின் இலக்காய் இருந்த கட்சி உறுப்பினர்களுக்கும் இது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது என்பதை அந்த தோழர்களோடு பேசும்போது உணர முடிந்தது.
சந்தா அளிக்க வாய்ப்பில்லாதவர் கூட சந்தா சேகரிப்பு இயக்கத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றதை உணர முடிந்தது. தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேல் திண்டுக்கல் நகரத்தில் அங்குள்ள கிளைச்செயலாளர்களும், இடைக்கமிட்டி உறுப்பினர்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றதென்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.நம்ம பேப்பர், எங்க பேப்பர், கட்சி பேப்பர் என்று தோழர்கள் தொடர்ச்சியாக பேசுவதும், வந்த தோழர்களை வெறுங்கையோடு அனுப்பி விடக்கூடாது என்ப தற்காக எடுத்து கொண்ட முயற்சிகளும், முதல் நாள் தொடங்கும்போது இருந்த நிலையிலிருந்து, அது தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் தோழர் களிடம் உருவாகியிருந்த உற்சாகமும், ஒருங்கிணைப்பும் மிக முக்கியமானது.
இதனினும் சிறந்த, இதை விட அதிகமாக ஒரு குறிப்பிட்ட தினத்தில் சந்தாசேர்த்த, குறிப்பிட்ட பகுதியில் சந்தாசேர்த்த பல அனுபவங்கள் பலருக்கும் இருக்கக்கூடும். ஆனால், கிளைகள், அவர்கள் செயல்படுகிற பகுதியில் கட்சி உறுப்பினரையும், கட்சிக்கு வெளியே நம்முடைய ஆதரவாளர்களையும் தீக்கதிரை வாங்கச் செய்யும் முயற்சியில் எடுத்துக்கொண்ட சிரத்தை, தொடர்ச்சி,வெளிப்பட்ட ஆற்றல் மிகுந்த பாராட்டுக் குரியது, நம்பிக்கையளிக்கக்கூடியது. நம்ம குடும்பம், நம்ம தீக்கதிர் அனுபவத்தை இதை வாசிக்கிற தோழர்கள் நம்ம ஊரில் அமல்படுத்திப் பார்த்தாலென்ன?

நன்றி தீக்கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக