<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

வெள்ளி, 23 ஜூன், 2017

மோடிக்கு காவடி தூக்கும் அதிமுக கோஷ்டிகள்


மோடிக்கு காவடி தூக்கும் அதிமுக கோஷ்டிகள்ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்ட உடனேயே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கோஷ்டி ஆதரவு தெரிவித்தது. அடுத்தடுத்து பன்னீர்செல்வம் கோஷ்டியும், டி.டி.வி. தினகரன் தலைமையிலான கோஷ்டியும் ஆதரவு தெரிவித்துள்ளன.அறிவிப்பு செய்ததோடு தில்லிக்குச் சென்று நேரடியாக ஆதரவு தருகிறோம் என்று அறிவிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு கோஷ்டிகள் தில்லிக்கு புறப்பட்டுள்ளன. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடந்த போது பன்னீர்செல்வம் கோஷ்டியினர் எதிர்த்து வாக்களித்தனர்.
பிறகு இரண்டு கோஷ்டிகளும் இணைவதற்காக பேச்சுவார்த்தைக்குழுக்கள் அமைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பழனிசாமி தலைமையிலான கோஷ்டி, சசிகலா தலைமையில் செயல்படுவதாக குற்றம்சாட்டி சமீபத்தில் பேச்சுவார்த்தைக்குழுவை கலைத்து இணைவதற்கான வாய்ப்பில்லை என்று பன்னீர் செல்வம் அறிவித்தார். தினகரன் தில்லி திகார் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த போது ஒரு பகுதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது அதிமுக மூன்று கோஷ்டிகளாக பிளவுபட்டு நிற்கின்றது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பிளவுபட்ட அதிமுக கோஷ்டிகள் கட்சித் தலைமையை, ஆட்சித் தலைமையை தக்க வைப்பதற்கும், பிடிப்பதற்கும் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இக்கோஷ்டிகளுக்குள் முட்டல், மோதல்கள் இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சிக்கும், ஆட்சிக்கும் காவடி தூக்குவதில் நீ முந்தி, நான் முந்தி என போட்டி போடுகின்றன. தமிழக மக்கள் நலன் குறித்து இக்கோஷ்டிகளுக்கு கவலை கிடையாது. மோடி தலைமையில் ஆட்சியமைந்ததிலிருந்தே அடுக்கடுக்காக மத்திய அரசு தமிழக மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. உச்சநீதிமன்றமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று முடிவெடுத்த போது உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்று மோடி அரசு தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டது.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரிய மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு தில்லிக்கு மாநில அரசு அனுப்பியது. ஆனால் பாஜக அரசு மாநில அரசின் மசோதாவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்ததோடு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப மறுத்து கிடப்பில் போட்டுவிட்டது.வர்தா புயல் மற்றும் வறட்சி நிவாரணத்திற்காக மாநில அரசு கோரியது ரூ. 61 ஆயிரம் கோடி. மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது சொற்பத் தொகையே. இதைப்பற்றி கூட அதிமுக கோஷ்டிகள் வாய் திறக்க மறுத்து விட்டன. சமீபத்தில் தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து பல திட்டங்களுக்காக தமிழகத்திற்கு சேர வேண்டிய சுமார் ரூ. 17 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கிட வேண்டுமென்று மாநில முதலமைச்சர் மனு கொடுத்தார். பிரதமரோ எதுவும் செய்யவில்லை.
இதுபற்றியும் முதலமைச்சர் மவுனம் சாதிக்கிறார்.மாநில உரிமைகளை பறிக்கக் கூடிய மற்றும் வகுப்புவாத நோக்கத்தோடு பசு, எருது, எருமை, ஒட்டகம் போன்ற விலங்குகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என்ற தடைச்சட்டத்தை கொண்டு வந்தது. எதிர்க்கட்சி முதலமைச்சர்களும், எதிர்க்கட்சிகளும், ஏன் நாடே மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்தது. அதிமுக கோஷ்டிகள் வாய் அடைத்து நிற்கின்றன.கழகங்கள் இல்லாத தமிழகம் என மூச்சுக்கு மூச்சு தமிழக பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். இது கூட இந்த கோஷ்டிகளுக்கு உறைக்கவில்லை.
உதய் திட்டம், உணவுப்பாதுகாப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டம், 100 நாள் வேலைக்கு ஒதுக்கீடு வெட்டு போன்றவை பற்றி இந்த கோஷ்டிகளுக்கு கவலையே கிடையாது. பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகிதம் குறைந்ததற்கு பண மதிப்பு நீக்க திட்டம் தான் என நடுநிலையான வல்லுநர்களே கருத்து தெரிவித்துள்ளனர். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வமோ, இன்று முதலமைச்சராக இருக்கிற பழனிசாமியோ இதுபற்றி வாய்திறக்கவில்லை?இப்போது இந்தி, எதிர்காலத்தில் சமஸ்கிருதம் என மத்திய அரசாங்கம் இந்தி பேசாத மாநில மக்கள் மீது மொழித் திணிப்புக்கு முயற்சிக்கிற போது பெரியார், அண்ணாவை இப்போதும் பெரிதும் போற்றுவதாக பேசி வரும் அதிமுக கோஷ்டிகள் ஏன் கண்டிக்கவில்லை?
பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்த பிறகு மத்திய அரசின் வழிகாட்டுதலில் செயல்படக் கூடிய பல ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவைகளில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை நியமித்து இந்துத்துவாவை நிலைநாட்டுவதற்கு மோடி பகீரத முயற்சி எடுத்து வருகிறார். எல்லா துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நியமித்து ஒட்டுமொத்த அரசு நிர்வாகமே ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் என்ற நிலைமையை உருவாக்கிய மோடி அரசு தற்போது குடியரசுத் தலைவராகவும் ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி தான் வர வேண்டுமென்ற நோக்கத்தோடு ராம்நாத் கோவிந்த் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு என்ற உள்ளடக்கத்தை கொண்ட அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொன்றாக மீறி வரும் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பவர் தான், ஆமாம் சாமி போடுபவர் தான் குடியரசுத் தலைவராக வர வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ்.சும் மோடி தலைமையிலான அரசும் கருதுகின்றன.
இதை எதிர்த்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் புதல்வி, முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளன. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அதிகாரங்களை பயன்படுத்தி எப்போது தங்களது வீடுகளிலும், அலுவலகங்களிலும் ரெய்டு வந்துவிடுமோ என்று நிரந்தரமான அச்சத்திலும், பதற்றத்திலும் உள்ள அதிமுக கோஷ்டிகள் பாஜக தலைமையிடம் சரணாகதி அடைந்துவிட்டன.

இது மதச்சார்பின்மைக்கும், தமிழக மக்கள் நலனுக்கும் இக்கோஷ்டிகள் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை பாதுகாக்கவும், மாநில அரசு - அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு ஊழல் சாம்ராஜ்யத்தை தொடரவும் வேண்டுமென்பது தான் இந்த கோஷ்டிகளின் நோக்கம் என்பது தெளிவாகிவிட்டது. வெட்கக் கேடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக