<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

திங்கள், 12 ஜூன், 2017

#விவசாயிகளின்துயரம்-Man Made Disasters; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் எப்படியெல்லாம் தொலைநோக்குடன் விவசாயத்தை பாதுகாத்து இருக்கிறார்கள். சேர,சோழ,பாண்டியர்கள் காலத்தில் 39000 ஏரிகள்,ஒன்றரை லட்சம் குளங்கள் உருவாக்க பட்டது. பாசன வசதிகள் மேன்மையாக கட்டமைக்கப்பட்டது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத புகழ்பெற்ற பூகோள அமைப்பு நமது டெல்டா பிரதேசம். ஒன்றுபட்ட தஞ்சையில் மட்டும் 16000கால்வாய்கள்.இவைகள் 26000கி.மீ பயணிக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை செய்ய முடிந்தது என்றால் இப்போது ஏன் இந்த அவலம். அனைத்திலும் ஊழல் என்பது தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்--தோழர். கே.பாலகிருஷ்ணன், விவசாயிகளுக்கு ஆதரவாக நமதுDYFI தோழர்கள் நடத்திய 100கி.மீ டெல்டா நடைபயண நிறைவு நிகழ்ச்சி-உரை.

தீக்கதிர் செய்தி

தமிழகத்தில் விவசாயிகள் கிளர்ச்சி வெடிக்கும்
திருவாரூர் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை


திருவாரூர், ஜூன் 12-
பாரதிய ஜனதா ஆளும் மத்தியப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப் பாக்கிச் சூட்டில் 9 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் விரைவில் விவசாயிகள் கிளர்ச்சிவெடிக்கும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள் ளார்.விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும்.
இறந்துபோன விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து திருவாரூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 100 கி.மீதூரம் தொடர் அரைநிர்வாண ஓட்டம்நடைபெற்றது. இதன் நிறைவாக திருவாரூர் கீழவீதியில் பொதுக்கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங் கேற்றுப் பேசிய கே.பாலகிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது:மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசுதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.
அங்கே கோரிக்கைகளுக்காக போராடிய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் 9 விவசாயிகள் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பலத்த காயம் அடைந்தனர். இந்த அராஜகத்தை கண்டித்துமாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனைக் கட்டுப்படுத்தமுடியாத நிலையில் அம்மாநில பாஜகமுதலமைச்சர் உண்ணாவிரதம் இருந்தார். இதுதான் மோடியின் ஆட்சியில் விவசாயிகளை மதிக்கும் லட்சணமாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராடி வெற்றி பெற்றுள்ளனர்.
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு உருவாகி உள்ளது.தமிழகத்திலும் விவசாயிகளின் எந்த கோரிக்கைகளும் தீர்க்கப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உள்ளன. தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து திருவாரூரில் ஜூன் 14ம் தேதியன்று (புதன்) இடதுசாரி விவசாயிகள் உட்பட 25க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும்பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம். தமிழகத்தில் உருவாகஇருக்கிற விவசாயிகள் கிளர்ச்சிக்குஇது கால்கோள் விழாவாக இருக்கும். அந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் வீட்டுப்பிள்ளைகளான இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்க வேண்டும்.

திட்டமிடாத அரசு

தமிழகத்தில் தற்போது கடும்வறட்சி நிலவுகிறது என்பது உண்மைதான். கடந்த 18 மாதங்களுக்கு முன்னால் தமிழகம் வெள்ளக்காடாக மாறியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டன. விவசாயிகள் கடும்துயரத்துக்கு ஆளானார்கள். அப்போது சட்டமன்றத்தில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட்டோம். அப்போது அவர், ‘என்னசெய்வது, 100 ஆண்டுகளில் பெய்யாதமழை 52 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
இதனால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுவிட்டது’ என்றார். தற்போதைய வறட்சி 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என இப்போது எடப்பாடிஅரசு கூறுகிறது. வருணபகவான் மீதுபழியைப் போட்டு விட்டு இவர்கள் தப்பிக்க பார்க்கிறார்கள். நீங்கள் அழைக்கும்போது வருவதற்கு வருணபகவான் என்ன உங்கள் வீட்டுவேலைக்காரனா? இயற்கை என்பதுமாறிமாறித்தான் வரும். ஆனால்அதற்கேற்றார்போல தற்காத்துக் கொள்ள தண்ணீரை சேமிக்க இந்த அரசிடம் ஏதேனும் உருப்படியான திட்டம் இருக்கிறதா?
தொன்மைத் தமிழன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மைத் தமிழர்கள்எப்படியெல்லாம் தொலைநோக்குடன் வாழ்க்கையை நடத்தி உள்ளனர்; விவசாயத்தை பாதுகாத்து இருக்கிறார்கள்... சேர, சோழ, பாண்டியர் காலத்தில் 39 ஆயிரம் ஏரிகள், ஒன்றரை லட்சம் குளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாசன வசதிகள் மிகவும் மேன்மையாக கட்டமைக்கப்பட்டன. நம்முடைய காவிரிடெல்டாவை எடுத்துக் கொள்ளுங் கள்... எவ்வளவு அற்புதமான கட்டமைப்பு கொண்டது!உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத புகழ்வாய்ந்த பூகோள அமைப்பு.

இந்த மூன்று மாவட்டங் களில் மட்டும் 16 ஆயிரம் கால்வாய் கள் உள்ளன. அதன் தூரம் 25 ஆயிரம் கிலோ மீட்டராகும். ஆயிரமாண்டுகளுக்கு முன்பாக இதையெல்லாம் கட்டிக் காக்க முடிந்தது என்றால் விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் ஆளும் அரசுகளால் ஏன் முடியாமல் போனது?அனைத்திலும் ஊழல் என்பதை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 60 ஆண்டு காலமாக நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கு எந்தஉருப்படியான திட்டமாவது உண்டா?தேவையான அளவு மழை பெய்தால்கூட அதனைப் பாதுகாத்து வைக்கிற எந்ததிட்டமாவது உண்டா? ஆட்சியாளர்களின் முறையற்ற நிர்வாகத்தால் இன்று தமிழகமே வறட்சியால் நிலைகுலைந்து போயுள்ளது.
அரிதாகும் தண்ணீர்
இன்று நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துள்ளது. நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. திண்டுக்கல் லில் 1300 அடி, கோவையில் 1500 அடி தோண்டினால்தான் தண்ணீரைப் பெறமுடிகிறது. தண்ணீர் அரிதான பொருளாகமாறி வருகிறது. விவசாயம் பொய்த்துப் போனதால் மனமுடைந்த நிலையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோய் உள்ளனர்.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று வந்தது. தமிழகஅரசு என்ன பதில் கூறியது தெரியுமா?தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை நடைபெறவில்லை என்று. நீதிபதி கேட்டார் அப்படியானால் மத்திய அரசிடம் ஏன் வறட்சி நிவாரணம் கேட்டீர்கள்; தமிழகத்தில் 82 விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினீர்கள் என்று. இல்லை அது பல்வேறு காரணங்களால் உயிர்இழந்தவர்கள் என்றது அரசுத் தரப்பு. சரி அப்படியானால் வேறு காரணங்களால் உயிர்இழந்த எல்லோருக்கும் நிவாரணம் கொடுப்பீர்களா என நீதிபதி கேட்டவுடன் அரசு வழக்கறிஞர் வாயை மூடிக்கொண்டார்.

கர்நாடகா வாதம்

வரும் ஜூலை 14ஆம் தேதி காவிரி நதிநீர் வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. தமிழக அரசின் நிலைப்பாடு கர்நாடக அரசின் தரப்புக்கு வலுசேர்ப்பது போல் அமைந்து விட்டது. கர்நாடக அரசு தங்களின் மாநிலத்தில் விவசாயிகள் 142 பேர் தற்கொலைசெய்துகொண்டதாக வாதத்தை முன் வைக்கப் போகிறார்கள். அப்போது தமிழக அரசு என்ன பதில் சொல்லும்? தமிழகஅரசின் கூற்றுப்படி, இங்குதான் விவசாயிகள் யாரும் இறக்கவில்லையே.
300க்கும் அதிகமான விவசாயிகளின் உயிர் பறிபோய்விட்டது என்ற உண்மையைச் சொல்வதற்கு ஏன் தயங்குகிறீர்கள்? 2013ஆம் ஆண்டு இதேபோன்று பிரச்சனை வந்தபோது சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினேன். அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும், விவசாயிகள் யாரும் தற் கொலை செய்துகொள்ளவில்லை என்றுதான் பதில் சொன்னார். அரசு கைவிட்டு விட்ட நிலையில் மரணமடைந்த 80 விவசாயிகளின் குழந்தைகளுக்கு படிப்பு செலவை சமூகச் சிந்தையுள்ள பல அமைப்புகளிடம் திரட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஏற்றுக்கொண்டு உதவிசெய்து வருகிறது என்பதை இந்த நேரத்தில்பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
நடிகர் மோடி
நமக்கு வாய்த்த பிரதமர் நரேந்திரமோடி மிகச்சிறந்த நடிகர். கறுப்புப் பணத்தை கைப்பற்றுவோம் எனப் பலரும்கூறினார்கள். மக்கள் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மோடி பார்த்தார்; நாட்டு மக்களிடம் கூறினார்; எல்லோரும் வங்கிகளில் கணக்கு தொடங்குங்கள். கறுப்புப் பணத்தை கைப்பற்றி எல்லோரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்போகிறேன் என்று. மக்களும் போட்டி போட்டிக்கொண்டு கணக்கை தொடங்கினார்கள். இங்குஉள்ள யாருக்காவது வங்கி கணக்கில் ஒரு15 ரூபாயாவது வரவு வைக்கப்பட்டிருக்கிறதா? அதுதான் நடிகர் மோடி.விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்குவிலை உயர்த்தி தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் மோடி. அதுவும் நடக்கவில்லை. இதற்கும் ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டது. மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் என்ன கூறினார் தெரியுமா? அது தேர்தலுக்காக ‘சும்மா’ சொன்னது என்று கூறினார். எவ்வளவு அயோக்கியத்தனம் இது!

அம்பானி அரசு

விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்றால் மோடிஅரசு என்ன சொல்லுகிறது தெரியுமா? கடன் தள்ளுபடி என்பது மோசமான முன்மாதிரியாகி விடுமாம். அரசின் கடன்வழங்கும் திட்டத்தையே சீர்குலைத்து விடுமாம்.அதுமட்டுமல்ல வங்கிகள் திவாலாகி விடுமாம். ஆனால் இதற்குமாறாக அம்பானி, அதானி, மிட்டல், விஜய்மல்லையா போன்ற கோடீஸ்வர முதலாளிகள் - கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடன்களை கொஞ்சமும் வெட்கம் இல்லாமல்தள்ளுபடி செய்கிறது மோடி அரசு. இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வாராகடன் என்று சொல்லி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி தனது பட்ஜெட்டின் மூலம் நேரடி வரி என்று கூறப்படும் தொழில்வரியை குறைத்து ஐந்தே முக்கால் லட்சம்கோடி ரூபாய் அளவுக்கு முதலாளிகளுக்கு வரிச் சலுகை செய்துள்ளார். முதலாளிகளுக்கான சொத்து வரியை ரத்தே செய்துவிட்டார்கள்.

தமிழக அரசு

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் நடப்பது எல்லாமே ஒரு மர்ம நாவலை படிப்பதுபோன்று உள்ளது. சேகர்ரெட்டி கைது, ராமமோகன்ராவ் வீட்டில் ரெய்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்ரெய்டு, டிடிவி தினகரன் கைது, முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு என விறுவிறுப்பாக தமிழக ஆளுங்கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு இதனை பயன்படுத்தி அதிமுக அணிகளை ஆட்டுவித்துவருகிறது. நடவடிக்கை என்று வந்தால்அதிமுக அணிகள் எல்லாம் சிறையில் தான் இணைய வேண்டும்.தமிழகம் முப்பத்தி ஒன்பதாயிரம் கோடி ரூபாய் நிதிகேட்டால் 1725 கோடிரூபாய் மட்டும் தருகிறது மத்திய அரசு. 50 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆளும்கட்சி தமிழக பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தை கலங்கடிக்கச் செய்ய வேண்டாமா? தமிழகத்தில் கிளர்ச்சி நடத்தியிருக்க வேண்டாமா? ஆனால் என்ன நடக்கிறது. அதிமுக அணிகளிடையே மோடி அரசுக்கு காவடி தூக்குவதில்தான் போட்டி நடக்கிறது.

ஓஎன்ஜிசி

காவிரி டெல்டா மாவட்டங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இந்திய அரசின் நிறுவனமான ஒஎன்ஜிசி திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 150 எண்ணெய் கிணறுகள் மூலம் எரிவாயுஎடுத்துவருகிறது. ஒரு கிணற்றின்மூலமாக ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. கதிராமங்கலம் கிராமத்தில் மட்டும் ஏழு எண்ணெய் கிணறுகள் உள்ளன. இங்கு உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய ஓஎன்ஜிசி முயன்றபோது அந்த கிராம மக்கள் ஒன்றுகூடி தடுத்தனர். இதனால் 800க்கும் மேற்பட்ட காவல் துறையினரை குவித்து மக்களை சிறைக் கொட்டடிக்குள் அடைப்பது போல ஒடுக்கி வைத்து விட்டு அப்பணியை ஓஎன்ஜிசி செய்தது.
இதில் பலர்மீது வழக்குபோடப்பட்டுள்ளது. போராடும் மக்களை காவல்துறையின் மூலம் ஒடுக்கிவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா? ஒருநாளைக்கு சுமார் 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஒஎன்ஜிசி காவிரி டெல்டா மாவட்டங்களின் நிரந்தர வளர்ச்சிக்கு என்று உருப்படியாக ஏதேனும் செய்திருக்கிறதா? மக்களுக்கு ராயல்டி வழங்கப்பட்டுள்ளதா? எதுவும் இல்லை. எனவே பாழ்பட்டுவரும் தமிழக விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்க அனைவரும் ஓரணியில் திரளவேண்டும். குறிப்பாக விவசாயிகளோடு இளைஞர்கள் கரம்கோர்க்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகதீரமிக்க போராட்டங்களை நடத்தவேண்டும்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
பொதுக்கூட்டம்
முன்னதாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் முத்துப்பேட்டை, நீடாமங்கலம், கொல்லுமாங்குடி ஆகிய மூன்று மையங்களிலிருந்து கே.பி.ஜோதிபாசு, ஏ.கே.வேலவன், கே.ஜி.ரகுராமன், கே.எஸ்.செந்தில்,பி.ஸ்டாலின், எம்.பிருந்தா ஆகியோர் தலைமையில் தொடர் ஓட்டமாக வந்தனர். நிறைவாக அன்று மாலை திருவாரூர்புதிய ரயில் நிலைய சந்திப்பில் சங்கமித்து அங்கிருந்து கீழவீதி பொதுக்கூட்டத் திடலை வந்தடைந்தனர். கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். இந்த தொடர் ஓட்ட நிகழ்வு விவசாயிகள் மத்தியிலும் திருவாரூர் நகர மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக