<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

சனி, 10 ஜூன், 2017

அன்று காமராஜர் இன்று யெச்சூரி! ஆ.பழனியப்பன்


தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்துத்துவாவினரால் தாக்கப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும், 50 ஆண்டுகளுக்கு முன்பாக தில்லியில் இந்துத்வாவினரால் அரங்கேற்றப்பட்ட இதேபோன்ற ஒரு சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.
தலைநகரில் திரண்ட சாமியார்கள்!
1966-ஆம் ஆண்டு. மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, பசு விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தீவிரமாகக் கையிலெடுத்தன. பசு வதைக்கு எதிராக உடனடியாக சட்டம் கொண்டுவரக் கோரினார்கள். அதை இந்திரா காந்தி ஏற்கவில்லை. எனவே, தில்லியில் பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது. 1966-ம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் தேதி நாடு முழுவதுமிருந்து நிர்வாண சாமியார்கள், சாதுக்கள் உட்பட இந்துத்துவா அமைப்பினர் பல்லாயிரக்கணக்கில் தில்லியில் திரண்டனர்.
காமராஜர் மீது கொலைமுயற்சி!
பாரதிய ஜன் சங் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுவாமி ராமேஸ்வரானந்த் தலைமையில் பெரும் கூட்டம் ஒன்று நாடாளுமன்றத்தை நோக்கி ஆவேசத்துடன் சென்றது. நாடாளுமன்றத்தின் கதவுகள் சாத்தப்பட்டிருப்பதைக்கண்டு ஆத்திரமடைந்த அவர்கள், நாடாளுமன்ற வீதியிலிருந்த அரசுக் கட்டடங்கள் அனைத்தையும் தாக்கத்தொடங்கினர். அங்கிருந்த, காங்கிரஸ் தலைவர் காமராஜர் வீட்டின்மீது அவர்கள் கல்வீசித் தாக்கினர். பிறகு, காமராஜர் வீட்டுக்குத் தீவைத்தனர். அப்போது, மதிய உணவை சாப்பிட்டுவிட்டு கண் அயர்ந்திருந்தார் காமராஜர். நல்லவேளையாக, அந்தத் தாக்குதலிலிருந்து அவர் உயிர்ப்பிழைத்தார். அன்றைக்கு காமராஜர் மீது கொலை முயற்சி நடந்தது. இன்றைக்கு சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு சம்பவங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளவர்கள் இந்துத்துவா அமைப்பினர் என்பது வெளிப்படையான ஒன்று.
யெச்சூரி மீது தாக்குதல்!
தில்லியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் அந்தக் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் ஜூன் 6, 7 தேதிகளில் நடந்தது. கூட்டத்தின் முடிவுகளை விளக்குவதற்காக ஜூன் 7-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. செய்தியாளர் சூழ கூட்ட அரங்கத்துக்கு யெச்சூரி சென்றுகொண்டிருந்தபோதுதான், பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழைந்த இரண்டு பேர், யெச்சூரிக்கு எதிராக கோஷமிட்டவாறு அவரைத் தாக்க முயற்சித்துள்ளனர். அவர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ‘பாரதிய இந்து சேனா’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
தலித்துகள், முஸ்லிம்கள், இடதுசாரிகள்... டார்கெட்!
யெச்சூரி மீது ஏன் இந்தத் தாக்குதல்? இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக, சென்னையில் யெச்சூரி விகடனுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது, ‘‘இந்து சேனா’, ‘ஸ்ரீராம் சேனா’ போன்ற பெயர்களில் தனியார் ராணுவத்தினர் இறக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வேலை எல்லாம் தலித்துகள், முஸ்லிம்கள், இடதுசாரிகள் ஆகியோரைக் குறிவைத்துத் தாக்குவது’ என்று குறிப்பிட்டார். இதற்கான காரணங்களையும் யெச்சூரி விவரித்தார்.‘கடந்த மூன்றாண்டுகால பாஜக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில், உருவாக்கப்பட்ட வேலைகள் வெறும் 3.6 லட்சம்தான்.
கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்துக்கு ஒதுக்கியிருக்க வேண்டிய நிதியில், 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் 36-40 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்கு கடன்சுமையே காரணம். விவசாயிகளுக்கான கடன்களைத் தள்ளுபடி செய்ய இந்த அரசு தயாராக இல்லை. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்சனைகளால், மோடி அரசின்மீது மக்கள் வெறுப்பில் உள்ளார்கள். அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, வகுப்புவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
வகுப்புவாதச் செயல்பாடுகளின் மூலம், மதரீதியாக மக்களை ஒன்றுதிரட்டுவது என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக தற்போது அதைச் செய்துவருகிறது. மதரீதியாக மக்களை ஒன்றுதிரட்டும் திட்டப்படிதான், ‘பசுப் பாதுகாப்பு‘, ‘கலாச்சாரக் காவல்’ என்று தனியார் ராணுவத்தை இறக்குகிறார்கள். இதன் மூலமாக தலித்துகள், முஸ்லிம்கள், இடதுசாரிகள் ஆகியோரை குறிவைக்கிறார்கள். சென்னை ஐ.ஐ.டி-யில் சூரஜ் தாக்கப்பட்டது அப்படித்தான். ‘இந்து ராஷ்டிரா’ என்ற அவர்களின் திட்டத்துக்காக இவற்றையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது’ என்றார் யெச்சூரி.
மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல்!
இந்தக் கருத்தை நம்மிடம் தெரிவித்துவிட்டு தில்லி சென்று மூன்று நாள்களில் யெச்சூரி மீதான தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதைக் கடுமையாக எதிர்த்துவரும் கேரள முதல்வர் பினராயி விஜயனும், மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த நிலையிலும், இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதற்கு முன்பாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் தேசவிரோத குற்றச்சாட்டின் பேரில் தில்லி போலீசாரால் கைதுசெய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்ததற்காக, 2016, பிப்ரவரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தின் மீது இந்துத்துவா அமைப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜூன் 9 விகடன். காம் இணைய ஏட்டில் வெளியான கட்டுரையில் இருந்து...

நன்றி: விகடன். காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக