<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

சனி, 3 ஜூன், 2017

பெ.சண்முகம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்


தீக்கதிர் செய்தி

படிப்பீர்களோ... மாட்டீர்களோ..பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம். இந்த விவசாயின் கண்ணீர் கடிதத்தை படிப்பீர்களோ, மாட்டீர்களோ? இருந்தாலும் நாட்டோட பிரதமருக்கு நம்ம கஷ்டத்தை தெரியப்படுத்திட்டோம் என்ற ஒருசின்ன நிம்மதி.பக்கத்து வீட்டு படிச்சபுள்ள புதுசா நீங்க ஏதோ உத்தரவு போட்டிருக்கிறதா நேத்துதான் சொல்லுச்சு! மாட்ட சந்தையிலகொண்டு போயி கசாப்புக்காக விக்க கூடாதுன்னு! மாட்டு மேல ஒங்களுக்கிருக்கிற அக்கற உலகத்துக்கே தெரியுமே. மாட்டு அரசாங்கமுன்னு சொல்லி நாட்ல பல எடத்துல மனிதர்களையே கொன்னு போட்ட கூட்டத்த சேர்ந்தவராச்சே. அதனால அதுல எனக்கு சந்தேகமில்ல. நாங்க மாட்ட எங்க குடும்பத்துல ஒருத்தரா நினைச்சித்தான் வளர்க்கிறோம். மாட்டுக்கு ஒன்னுன்னா குடும்பமே பதறிப்போவோம். மாட்டுக்கு முடியாமப் போச்சுன்னா ஊரே திரண்டு வந்து பார்க்கும்.

அவங்க வுங்களுக்கு தெரிஞ்ச வைத்தியத்தையெல்லாம் சொல்லுவாங்க. அவசரத்துக்கு விக்க வேண்டி வந்தாக்கூட சந்தோஷமா யாரும் விக்கமாட்டோம். குடும்பத்துல ஒருத்தரு பிரிஞ்சி போனா எப்படி துக்கப்படுவோமோ அப்படித்தான் மாடு எங்க வீட்ட விட்டு போகும் போதும்!மாட்டோட நல்லா பழகின சின்ன குழந்தைங்க மாட்ட விக்க வேணாம்னு கத்தி கதறி கூப்பாடு போடுவாங்க! அதனால மாட்ட எப்படியெல்லாம் பாத்துக்கனும்னு அரசாங்கம் உத்தரவு போட்டுத் தான் நாங்க நடக்கனும்னு அவசியமில்ல!விவசாயம் வீணா போயி வருமானமில்லாம நாங்க கஷ்டப்படறது உலகத்துக்கே தெரியும். ஆனா நீங்க அதப்பத்தி கவலைப்படமாட்டீங்க! எங்க அவசர செலவுக்கு உதவறஒரே ஜீவன் எங்ககிட்ட இருக்கிற ஆடு, மாடுதான். பால் கறக்கிற மாட்ட, வேலைக்கு உதவுற மாட்ட யாரும்கசாப்பு போட விக்கமாட்டாங்க அப்படிங்கறது குழந்தைக்குகூட தெரியும்.
ஆனா, அரசாங்கத்துக்கு தெரியாம இருந்திருக்கு.பால்சுரப்பு நின்னு போயி, இனிமே சினையே புடிக்காதுஎன்ற நிலையில் இருக்கிற மாட்ட என்ன பண்றது. விவசாய வேலைக்கோ அல்லது எந்தவொரு வேலைக்குமே உதவாத மாட்ட என்ன பண்றது. பால் மாட்டுக்கும், உழைக்கிற மாட்டுக்குமே போதுமான தீவனம் கிடைக்காமகஷ்டப்பட்டுகிட்டிருக்கிறோம். தீவனத்தோட வெல தினந்தோறும் பெட்ரோல், டீசல் மாதிரி ஏறிக்கிட்டே இருக்கு!வெல ஏறுனாலும் பரவாயில்ல! ஏதோ கஷ்டப்பட்டு கடனவாங்கி போடலாம்னா இந்த வறட்சியில தீவன தட்டுப்பாடுதலைவிரிச்சி ஆடுது. சந்தேகமாக இருந்தா தமிழக அரசாங்கத்தையே கேட்டுப்பாருங்க! இந்த நிலையில மாட்ட விக்காம என்ன பண்ண முடியும்.
பட்டினி போட்டு சாகடிக்கலாம், அல்லது தெருவுல அவுத்து விட்டுடலாம்! தெருவுல அவுத்து விட்டா என்னா ஆகும், ஊர்ல சண்டை தான் நடக்கும். ஏன்னா கண்ட இடத்தில அது போயி வாய வைக்கும், பயிரை கடிக்கும், வீட்டுக்குள்ள புகுந்து கண்ல படறத திங்கும் இந்த நிலையில சண்ட வராம என்ன பண்ணும். இதுதான் உங்க நோக்கமா?வீணா பட்டினி கிடந்து செத்து, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துற மாட்ட விரும்பி சாப்பிடற மக்கள் சாப்பிட்டா என்ன நட்டம் ஒங்களுக்கு! மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாதுன்னு சொல்லல, மாட்ட இறைச்சிக்காக விற்கக் கூடாதுன்னு தான் போட்டிருக்குண்ணு பி.ஜே.பிதலைவர்களெல்லாம் சொல்றாங்களாம்.
இறைச்சிக்காகமாட்ட விக்கக்கூடாதுன்னா, மாட்டிறைச்சி சாப்பிடவிரும்புற மக்களுக்கு எப்படி கிடைக்கும்?வெளி நாட்லேர்ந்து இறக்குமதி செய்து தருவீங்களோ?மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யறதுல நம்ம நாடு தான் உலகத்திலேயே முதலிடத்துல இருக்குதுன்னு அந்த படிச்சபுள்ள சொல்லிச்சி. இங்கேந்து ஏற்றுமதி செய்யற இறைச்சிய எதுக்கு இறக்குமதி செஞ்சி சாப்பிடனும். அப்படியே சாப்புடலாந்தானே?யார் என்னென்ன சாப்புடனும்னு நீங்க உத்தரவு போடறது சரியா? நீங்க அசைவ உணவு மட்டும் தான்சாப்புடனும்னு சொன்னா ஒத்துக்குவீங்களா? பிடிக்காத உணவை குடுத்தா குழந்தை கூட சாப்பிடாது. கட்டாயப்படுத்தி ஊட்டுனா. காறித்துப்பிடும். அப்படி இருக்கும் போது, வளர்ந்த மனிதர்கள் அவுங்க எதசாப்பிடனும்னு அவிங்களுக்கு தெரியாதா?
பிரச்சனையே சாப்பிட சத்தா எதுவுமே கிடைக்கலன்றது தான்! பட்டினி கிடக்கிற மனிதர்களைப் பற்றி நீங்க கவலப்பட மாட்டீங்க, மாடுகளை பத்தித்தான் ஒங்க கவலைப் பூரான்றது நாட்டுக்கே தெரியுமே!சரி! உண்மையிலேயே மாட்டுமேல உங்களுக்கு அக்கறையிருக்குதுன்னு சொன்னா மாட்டவிக்கிற விவசாயிகிட்டேயிருந்து அரசாங்கமே விலை குடுத்துவாங்கி பாதுகாக்க வேண்டியது தானே? விவசாயிக்கும் நல்ல வெல கிடைக்கும். மாடும் தானா சாகிற வரைக்கும் அரசு பாதுகாப்புல இருக்கும்ங்கிற நிம்மதி கிடைக்கும். எதுக்கு மாட்ட வாங்குறவரையும் - விக்கிறவரையும் போட்டு சித்ரவதை பண்றீங்க!மாட்டவிக்க ஏதேதோ சர்டிபிகேட்லாம் வாங்கனுமாம்! சர்டிபிகேட் வாங்குறது தான் இருக்கிறதுலேயே கஷ்டம். மாட்டுவெலயில பாதி, சர்டிபிகேட் வாங்கவே சரியா போயிடும்! கீழேயிருந்து மேலவரைக்கும் குடுத்தாத்தான் சர்டிபிகேட் கிடைக்கும்.
அதுக்கு எத்தன நாள் மெனக்கடனுமோ? இருக்கிற வேலையில இதுக்கு ஏது நேரம்? அவசரத்துக்கு விக்கும் போது இதுக்கெல்லாம் அலைஞ்சிகிட்டிருக்க முடியுமா? ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க! அந்த மாதிரி தான் உங்க உத்தரவு!. அதுசரி, இந்த நாடாளுமன்றம், சட்டமன்றம் எல்லாம் எதுக்கு இருக்கு! சட்டத்தை உருவாக்க தான? அங்க இதப்பத்தி ஏன் பேசமாட்டேங்குறீங்க! நீங்க ஆட்சிக்கு வந்ததிலேர்ந்து ‘அதிரடி மன்னன்’,ஆக் ஷன்கிங்ன்ற மாதிரி எடுத்தேன் - கவித்தேன்னு செயல்படறீங்களே! இந்தியா மாதிரி ஜனநாயக நாட்டுக்கு இது சரிப்படுமா? புடிச்ச முயலுக்கு மூனு காலுன்னு அடம்புடிச்சா எப்படி?நாங்க ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த மாநில அரசாங்கம் ஒன்னு இங்க இருக்கு. இந்த ஆடு, மாடு விக்கறது, வாங்குறது பத்தி கூட உத்தரவு போடுற உரிமை இந்த அரசாங்கத்திற்கு இல்லையா.
எல்லாத்தையும் மத்திய அரசாங்கமே முடிவு பண்ணும் அப்படின்னா, மாநில அரசுக்கு என்ன தான் வேல? நீங்க என்னமோ மாநில அரசாங்கத்துக்கு உள்ள உரிமைய மதிக்காம நடந்துக்கறீங்கதான்னு எனக்கு தோணுது...கோமாதா, அது இதுன்னு ஏதேதோ சொல்லி, ஆகவே கொல்லக்கூடாதுன்னு சொல்றீங்க! ஆனா, எங்களுக்கு அதுமாடு தான். அவசரத்துக்கு உதவுகிற ஒரு ஜீவன். எங்க ஊரு வார சந்தையில கொண்டு போனா கட்டாயம் விக்க முடியும். வாங்குறவங்க, விக்கிறவுங்க ரெண்டு பேருமே சந்திக்கிற இடம் சந்தை. எல்லாத்தையும் சந்தைதான் தீர்மானிக்கும்னு சொல்லுவீங்களே! இந்த உத்தரவு மூலம் மாட்டுச் சந்தையையே காலி பண்ணிட்டீங்களே! மாட்ட விக்கிறதுக்கு இவ்வளவு கஷ்டத்த அனுபவிக்கனும்னா எதுக்காக அத வளர்க்கப் போறோம். அப்படியே காலப் போக்கிலே மாட்டு இனமே அழிஞ்சி போயிடும்!

மாட்டுலேர்ந்து கிடைக்கிற பால், தயிர், வெண்ணெய், நெய், இறைச்சி எல்லாவற்றையும் உங்க நெருக்கமான கூட்டாளியா இருக்கிற அதானி, அம்பானி கூட்டம் இறக்குமதி செஞ்சி இங்கவித்து கொள்ளை லாபமடிக்கும். இந்த மாதிரி ஏவாரத்துல ஈடுபட்டிருக்கிற கோடானுகோடி மக்கள் வாழ வழியின்றி மடியும். இதுதானே ஒங்க நோக்கம்!இப்படி எல்லாருக்கும் இம்சையாக இருக்கிற ஒரு உத்தரவு எதுக்காக! இந்த உத்தரவ ரத்து பண்ணிடுங்க! அது தான் மாட்டுக்கு, நாட்டுக்கு, நமக்கு நல்லது! இல்லன்னா நாங்களே அந்த உத்தரவ தீ வைச்சி எரிக்கிறதுன்னு எங்க ஊர்ல முடிவு பண்ணியிருக்கோம்ங்கிறத பணிவோடு தெரிவிச்சிக்கிறேன். முடிவு உங்க கைல தான் இருக்கு! நன்றி! நாட்டுக்கு திரும்பி வந்த உடனே நேரமிருந்தா எனக்கு பதில் கடிதாசி போடுங்க, வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக