<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

வெள்ளி, 16 ஜூன், 2017

ராமர் சென்று விட்டார், ராவணனும் சென்று விட்டான், இவர்களும் சென்று விடுவார்கள்!!!

தீக்கதிர் கட்டுரை
—–அருண் ஷோரி—–
என்டிடிவி செய்தி தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட சிபிஐ சோதனையைக் கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று (’09-06-2017) புதுதில்லியில் உள்ள இந்திய பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற ஊடக சுதந்திரத்திற்கான கூட்டத்தில் ஆற்றிய உரை;
என் இனிய நண்பர்களே, நரேந்திர மோடிக்கு முதலில் நான் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அவர் நிறைய நண்பர்களை ஒன்று சேர வைத்திருக்கிறார். அதற்கு நன்றிக்கடனாக, குல்தீப் நய்யார் நம்மிடம் சொல்லுகின்ற ‘‘உங்களுக்கு முன்பாக இந்த அரியணையை அலங்கரித்தவர், உங்களைப் போலவே தன்னை ஒரு கடவுளாக நம்பினார்’’ என்ற கவிதையினை நான் உங்களிடம் வாசிக்க விரும்புகிறேன்.
அந்தக் கவிதையை பாகிஸ்தானியக் கவிஞரான ஹபீப் ஜலிப் என்பவர் எழுதியிருப்பதால், என்னை நானே பாதுகாத்துக் கொள்வதற்காக ‘‘ராமர் சென்று விட்டார். ராவணனும் சென்று விட்டான். இவர்களும் சென்று விடுவார்கள்’’ என்ற வாசகத்தை கிரந்த சாகிப்பிலிருந்து வாசிக்கிறேன்.
இந்தக்கூட்டத்தில் பேசிய பத்திரிகையாளர் நிஹால் சிங் சாகிப் முன்மொழிந்த ‘‘நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வியை நான் விவாதிக்க விரும்புகிறேன். திரு.குல்தீப் நய்யார் கூறியது போல், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், இதில் இருக்கும் உண்மை என்னவெனில், ஒவ்வொரு தலைமுறையினருக்கும் சுதந்திரத்தின் பாடம் என்பது கற்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த முறை அந்தப் பாடம் மீண்டும் ஆரம்பித்துவிட்டது. ஒரு புதிய கட்டம் தொடங்கியிருப்பதை உணர வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்.
விளம்பரங்கள் என்ற லஞ்சம் 
இதுவரையிலும் அரசாங்கம் இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறது. விளம்பரங்கள் என்ற லஞ்சத்தின் ஊடாக ஊடகங்களின் வாயை அடைத்து வைப்பது ஒரு விதம். வாயில் எலும்பை வைத்திருக்கும் நாய் குரைக்காது என்று ஜூலு பழமொழி ஒன்று இருக்கிறது. வாயில் விளம்பரங்களை வைத்திருக்கும் நாய்களாக அவர்கள் செய்தி ஊடகங்களை மாற்றி விடுவதால், அந்த நாய்களால் அவர்களைப் பார்த்து குரைக்க முடியாது.
இரண்டாவதாக, மறைமுகமாக அச்சத்தைப் பரப்புவதன் மூலம் அவர்கள் ஊடகங்களைக் கட்டுப்படுத்தி நிர்வகித்து வருகின்றனர். ‘‘உங்களுக்குத் தெரியுமா, மோடி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் மிகப் பெரிய குழு ஒன்று இருக்கிறது . . . அவரிடம் இது இருக்கிறது . . . அவரிடம் அது இருக்கிறது . . . அமித் ஷா சிபிஐயை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். நாளை இதைப் போல அவர்கள் உங்களுக்கும் செய்வார்கள்’’ என்பது போன்ற செய்திகளைப் பரப்புவதன் மூலம் அவர்கள் நிர்வகிக்கிறார்கள்.
ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். சிபிஐ ரெய்டுகள் நடந்திருக்கின்றன.
இந்த மனிதன் (என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய்) இன்னும் உயிரோடிருக்கிறார். இந்தச் சேனல் இன்னும் வலிமையானதாக போய்க் கொண்டிருக்கிறது.
அந்த இரண்டு வழிமுறைகளிலிருந்தும் அவர்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். இப்போது அவர்கள் மூன்றாவது வழிமுறையைப் பயன்படுத்துகின்றனர், இது வெளிப்படையாக தரப்படுகின்ற அழுத்தம் ஆகும். அதற்கு என்டிடிவியை ஒரு எடுத்துக்காட்டாக்கி இருக்கின்றனர். வரவிருக்கும் மாதங்களில் இது தீவிரமடையும், இன்னும் தீவிரமடையும் என்றே நான் நம்புகிறேன்.
மரபணுக்களில் நிறைந்திருக்கும் சர்வாதிகாரம்
இந்த ஆட்சியின் தன்மையில், அதன் மரபணுக்களில் சர்வாதிகாரம் நிறைந்திருக்கிறது. இந்த ஆட்சி கொண்டிருக்கும் இத்தகைய தன்மையின் காரணமாகவே நிலைமை தீவிரமடையும் என்பதாக நான் நம்புகிறேன்.
சர்வாதிகாரம் என்பது எதைக் குறிக்கிறது? இந்தியாவின் முழு பரப்பிலும், வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தங்களது மேலாதிக்கத்தைச் செலுத்தி, அனைத்து பொதுவிடங்களிலும் அவர்களது மேலாதிக்கம் நிறுவப்பட வேண்டும் என்பதே சர்வாதிகாரம்.
நீங்கள் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கவனித்தால், அதைப் படிப்படியாக அவர்கள் விரிவாக்கிக் கொள்கிறார்கள் என்பதைக் காண முடியும். இரண்டாவதாக, விளம்பரங்களிலும், பேச்சுகளிலும் அவர்கள் சொல்லுவதற்கும், மக்கள் தங்களது வாழ்க்கையில் எவ்வாறு அதனை உணர்கிறார்கள் என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் – நீங்கள் ஒரு விவசாயி அல்லது வேலையை இழந்த ஒருவராக இருந்த போதிலும் – ஏற்கனவே அதிகமாக அளவில் இருக்கும் வித்தியாசம், இன்னும் அளவில் அதிகமாகப் போகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, இனிமேலும் அவர்கள் எதிர்ப்புக் குரலை நசுக்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. இதை முதலாவதாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பத்திரிகைகளுக்கு எதிராக தங்களது கைகளை உயர்த்திய எவரும் தங்கள் கைகளைச் சுட்டுக் கொண்டு மீண்டும் அவற்றைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது என்பதை திரு.பாலி நாரிமன் பேசுகையில், நமக்கு நினைவூட்டியிருக்கிறார்.
தனது வாழ்க்கையை முன்வைத்து, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இதனை குல்தீப் நமக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இதனை கணக்கில் கொண்டு முழு நம்பிக்கையுடன் நமது பணியினை நாம் தொடர வேண்டும்.
ஜகன்னாத் மிஸ்ரா கொண்டு வந்த பத்திரிகை மசோதா, ராஜீவ் காந்தி கொண்டு வந்த மசோதா, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் உரிமையாளர் ராம்நாத்ஜியை நீக்கி விட்டு, ஒரு போலி பலகையை அங்கு வைத்து விட்டு பத்திரிகையை எடுத்துக் கொண்ட திருமதி இந்திரா காந்தி என்று ஊடகங்களுக்கு எதிராக தங்கள் கைகளை உயர்த்திய அனைவரும், தங்கள் கைகளைச் சுட்டுக் கொண்டு பின்வாங்க வேண்டியிருந்தது.
அவதூறு மசோதா கொண்டுவரப்பட்ட போது, நாம் இங்கே ஒரு கூட்டத்தினை நடத்தியதை துவா நமக்கு நினைவூட்டினார். ஆனாலும் நீங்களும் நானும் நன்றாக அறிந்திருக்கிறோம், இன்றைய தினத்தில் கூடியிருப்பதைப் போன்று அதிக அளவிலான நபர்கள் அப்போது கூடியிருக்கவில்லை என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
இரண்டாவதாக நான் சொல்ல விரும்புவது, உண்மைகள் மிகத் தெளிவாக இருக்கின்றன. நாரிமன் அவற்றை வெளிக் கொணர்ந்துள்ளார். என்டிடிவியும் அவற்றை வெளிக் கொணர்ந்துள்ளது. சிபிஐயால் அந்த உண்மைகளுக்குப் பதிலளிக்க முடியவில்லை. இன்று அது குறித்து தி வயர் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் மூலம் இரு பெரிய நிறுவனங்களுக்கு எதிராக, நாட்டிற்கு ரூ. 30,000 கோடி ரூபாய் இழப்பினை ஏற்படுத்தியிருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் தனிநபர்களால் கொடுக்கப்பட்டது அல்ல, ஆனாலும் சிபிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஊடகங்களுக்கு எதிராக ஊடகங்களையே ஆயுதமாக்குவார்கள்
உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. நான் வேறோன்றைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். இது ஒருவருக்கொருவர் தீர்ப்பினை வழங்கிக் கொள்ளுவதற்கான நேரம் இல்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து இதை நான் சொல்கிறேன்.
நீங்கள் சேவை செய்ய வேண்டியிருக்கும் போது, உங்களது சேவை முற்றிலும் தீர்ப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால், வாழ்நாளெல்லாம் அவர் சிகரெட்களைப் புகைத்து வந்தார். எனவே அவருக்கு புற்றுநோய் வந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஆகவே அவர் கஷ்டப்படட்டும் என்பது போன்று ஒருவருக்கு உதவக்கூடாது என்பதற்கான பல காரணங்களை நமது மனம் பரிந்துரைக்கும்.
இல்லை, இது நியாயம் குறித்து பேசுவதற்கான நேரம் இல்லை. உங்களது நண்பருக்கு முழுமையான உதவியையும் சேவையையும் அளித்து அவரை நீங்கள் ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இத்தகைய விவகாரங்களைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களை பிரித்தாளுவதற்கு அவர்கள் முயலுவார்கள்.
அதற்கு அவர்கள் உங்களைப் பயன்படுத்துவார்கள், ஊடகங்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கு ஊடகங்களையே அவர்கள் பயன்படுத்துவார்கள். எனவே, தயவுசெய்து நீங்கள் அதற்கான கருவியாகி விடாதீர்கள்.
இரண்டாவது விஷயம், ஒருவருக்கொருவர் தோள் கொடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், சகமனிதர்கள் தங்களோடு நிற்கவில்லை என்பதை அறிந்துகொள்ளுகின்ற நபரின் மன உறுதியானது சீர்குலைந்து விடும் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.
என் கீழ் பணிபுரிந்த அரசுப் பணியாளர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக மூன்று அரசுப் பணியாளர்கள் மீது கடந்த ஆட்சிக் காலத்தில் சிபிஐ விசாரணை துவங்கிய போது, அரசுப் பணியாளர்கள் மத்தியில் இத்தகைய உணர்வு இருந்ததை நான் கண்டிருக்கிறேன். அந்த முடிவுகள் என்னால் எடுக்கப்பட்டவை என்பதால், அரசுப் பணியாளர்கள் அவை எதற்கும் பொறுப்பாகமாட்டார்கள் என்று சிபிஐக்கு நான் எழுதியிருந்தேன்.
ஆனாலும் மற்ற அரசுப் பணியாளர்கள் அவர்களோடு சேர்ந்து நிற்கவில்லை என்பது அவர்களை மனச்சோர்வடைய வைத்தது. எனவே நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து இருக்க வேண்டும்.
எனக்காக யார் போராடுவார்கள்
தேவாலயங்களை ஒருங்கிணைப்பதாக ஹிட்லர் கூறியதை எதிர்த்து ஜெர்மனியில் இருந்த லுத்தரன் போதகர் ஒருவர் கூறிய மிகவும் பிரபலமான வரிகளை ஃபாலி நாரிமன் மேற்கோள் காட்டினார்.
அதைவிட மிகப் பழமையான, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஹில்லால் அவர்களின் கூற்று ‘‘எனக்காக நானே இருக்காவிட்டால், எனக்கென்று வேறு யார் இருப்பார்கள்? எனக்கென்று நான் போராடவில்லை என்றால், எனக்காக யார் போராடுவார்கள்? எனக்காக மட்டுமானவாகவே நான் இருக்கிறேன் என்றால், நான் யார்? இப்போது இல்லையென்றால் – எப்போது’’ என்பதாக இருக்கிறது.
இதைப் பற்றிய விழிப்புணர்வு பத்திரிகைத் துறையில் என்னுடன் பணியாற்றுபவர்களிடம் இல்லை என்ற வருத்தம் என்னிடம் இருக்கிறது என்பதை உங்களிடம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த வருடம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்விற்கு நான் தற்செயலாக அழைக்கப்பட்டிருந்தேன்.
அப்போது ராஜஸ்தான் பத்திரிகை மீது தொடுக்கப்பட்ட தொல்லைகள், ஏற்படுத்தப்பட்ட நிதி இழப்பு ஆகியவற்றைப் பற்றி என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. புதுதில்லி மற்றும் தில்லியிலிருந்து வருகின்ற பத்திரிகைகளை மட்டும் படித்து வரும் சராசரி வாசகனான எனக்கு அது பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
எனவே நாம் இவ்வாறான எந்தவொரு முயற்சியையும், அது மிகப் பிரபலமான என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் என்பதற்காக மட்டுமல்லாது, நாட்டின் எந்தப் பகுதியில் இவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் உங்களை கவனிக்கிறது
நமது முயற்சிகளுக்கான தேவை என்னவென்றால், அரசாங்கங்கள் நமது எதிர்வினையாற்றல்களைக் கவனித்து வருகின்றன. இங்கு அதிக அளவில் ஊடகவியலாளர்கள் கூடியிருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான்.சமூக ஊடகங்களில் வரும் செய்திகளுக்கும் கூட அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் தருவதாக என்னால் சொல்ல முடியும்.
டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பதற்கான குழுவினை வைத்திருக்கிறார்கள். எனவே இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறார்கள் என்பதைக் காணும் போது, ரவீஷ் குமாரைப் போன்று பயமில்லாமல் பல பேர் இங்கே கூடியிருக்கிறார்கள் என்பதை அவர்கள் பார்க்கும் போது, தாங்கள் தவறானதொரு முடிவினை எடுத்து விட்டதாக நிச்சயம் உணர்வார்கள். இதிலிருந்து மீள்வதற்கான வழியினை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.
ஆனாலும் அரசாங்கங்களுக்கு உதவுவதற்கான வழியினையும் நாம் வைத்திருக்கிறோம். நிகழ்வின் இரு பக்கங்களையும் சொல்லுவது என்பது பத்திரிகையாளர்களுக்கு இருக்கக் கூடிய மிக எளிமையான வழி.
முதலில் பிரணாய் ராயிடம் சென்று அவரைப் பார்த்து, ‘‘ஐயா, நடந்த உண்மைகள் என்ன?’’ என்று கேளுங்கள். பிறகு சிபிஐயிடம் சென்று, ‘‘ஐயா, நடந்த உண்மைகள் என்ன?’’ என்று கேளுங்கள். இத்தகைய நடுநிலை, தீ வைப்பவருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் இடையே கடைப்பிடிக்கும் நடுநிலைமை – இதுதான் அரசாங்கங்கள் உங்களைப் பயன்படுத்துகின்ற முறையாகும், எனவே நீங்கள் அதை எதிர்த்து நிற்க வேண்டும்.
எனவே இதனைத் தாண்டிச் சென்று, தகவல்களைத் தடுப்பதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியையும் நன்கு கவனியுங்கள். தகவல் அறியும் உரிமையின் குரல்வளை நெரிக்கப்படுவதை எதிர்த்து ஒரு சமூகமாக நாம் எதிர்வினையாற்றவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.
தகவல் அறியும் உரிமை என்றொரு பொக்கிஷம்
குல்தீப் நய்யார் மற்றும் நிஹால் சிங் ஆகியோர் நன்றாக வேலை செய்கிறார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் ராஜ் கமல் ஜா என்னிடம் சொன்னார். குல்தீப் மற்றும் நிஹால் ஆகிய இருவரும் அங்கே ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.
அரசாங்கத்திடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவதில் அவர்கள் சிறப்பாக வேலை செய்கின்றனர். ஆனாலும் இவர்களது ஒவ்வொரு கோரிக்கையும் முதல் சுற்றில் நிராகரிக்கப்படுவதாக ராஜ் என்னிடம் சொன்னார். மேல்முறையீடு செய்யப்பட்டு, பல மாதங்கள் ஆனபிறகு சிதைக்கப்பட்ட அல்லது முழுமையில்லாத பகுதித் தகவல்கள் மட்டுமே தரப்படுகின்றன. ஆனால் நாம் இந்த உண்மைகளை பத்திரிகைகளில் வெளியிடுவதில்லை.
தகவல் அறியும் உரிமை என்பது நமக்கு கிடைத்திருக்கும் மிகுந்த மதிப்பிற்குரிய உரிமைகளில் ஒன்றாகும். எனவே, தகவலைப் பெறும் உரிமையின் மீது செலுத்தப்படும் அத்துமீறல் என்பது பேச்சுரிமையின் மீதான அத்துமீறலைப் போன்றதாகவே இருக்கும் என்றே நான் கூறுவேன். ‘‘தகவல் இருந்தால் மட்டுமே என்னால் பேச முடியும்’’ என்று நீதியரசர் பகவதி கூறியதாக ஃபாலி அடிக்கடி எங்களிடம் நினைவூட்டுவார். எனவே, தகவல்களை அடைவதற்கான, பெறுவதற்கான உரிமை என்பது பேச்சுரிமையில் இருந்தே பெறப்படுவதாக இருக்கிறது.
சமூக ஊடகங்களில் இயங்குங்கள்
அரசாங்கம் சமூக ஊடகங்களின் மூலம் பொய்களைப் பரப்பி, எல்லோருக்கு எதிராகவும் துஷ்பிரயோகம் செய்வதை என்னால் உணர முடிகிறது. சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டு உங்களில் சிலர் அதனை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில் பிரதமர் அலுவலகத்தில் மோடி வைத்திருக்கும் குழுவிற்கு கிரண் ஜோஷி என்பவர் தலைமை தாங்குகிறார்.
உங்களில் பலரும் அவரைச் சந்தித்திருப்பீர்கள். சமூக ஊடகங்களைக் கவனித்து அதனைப் பிரதமருக்குத் தெரிவிக்க வேண்டியது மட்டுமே அவரது ஒரே வேலை. எனவே அவர் அதன் முக்கியத்துவத்தை உணருகிறார்; அதுவே அவருடைய பலவீனம். குறிப்பாக, வெளிநாட்டு செய்தி ஊடகங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதால், இங்கு நடக்கும் அனைத்தையும் பற்றி வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இரண்டாவதாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதை நாங்களும் கவனித்து வருகிறோம் என்பதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துங்கள். நான் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பல பத்திரிகையாளர்கள் இதற்குப் பலியாகியிருப்பதை கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன், வழங்கப்படும் சிறிய சலுகையானது உங்களுக்கு அமைதியைப் பெற்றுத் தரும் என நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
கொத்தடிமைகளால் உங்களுக்கு உதவ முடியாது
அமைச்சர்கள் சிலரின் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளித்தால், அவர்களுக்கு தொலைக்காட்சியில் நேரத்தை ஒதுக்கினால், அவர்கள் உங்களுக்கு நெருக்கடி காலத்தில் உதவுவார்கள் என்று உங்களில் பலரும் கருதுகிறீர்கள்.
வெங்கய்யா நாயுடு என்னுடைய நண்பர், எங்களது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் முக்கால் பக்கத்திற்கு ஒரு கட்டுரையை அவர் எழுதுகிறார். அதே வெங்கய்யா நாயுடுவை ஒரு சிறிய நோட்புத்தகத்தில் ஒரு பக்கம் கோர்வையாக எதையாவது எழுதச் சொன்னால் . . . உங்களுக்குத் தெரியும் அவரால் எழுத முடியாது என்று.
இருந்தாலும், அவரது கட்டுரையைப் பிரசுரிக்கின்றீர்கள். அந்த இடத்தை அவருக்கு வழங்கி, இவரைப் போன்றவர்களுக்கு அதிக நேரத்தை ஒதுக்கி சமாதானமாகப் போகலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.அது உண்மையில்லை. உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது, உங்களுக்கு அவர்கள் யாராலும் உதவ முடியாது. 
உண்மையில் இன்றைக்கு அமைச்சர் என்று யாரும் இல்லை, இது வெறும் இரண்டரை ஆட்கள் சேர்ந்து நடத்துகின்ற அரசாங்கமாகும். இந்த அமைச்சர்கள் எல்லாம் கொத்தடிமைகள் போன்றவர்கள். அவர்களால் உங்களுக்கு உதவ முடியாது. உண்மையில், அவர்கள் செய்வது என்னவென்றால், அவர்களில் ஒருவருக்கு பிரணாய் ராய் நண்பர் என்றால், தான் பிரணாய் ராயின் நண்பன் என்று மோடி நினைத்து விடக் கூடாது என்று பயப்படுபவராகவே அவர் இருப்பார்.
எனவே அவரை விட்டு விலகி நிற்கவே விரும்புவார். எனவே சில சிறிய சலுகைகளைப் பெறுவதன் மூலம் சமாதானமாகப் போய் விட முடியும் என்று மட்டும் நினைக்காதீர்கள். அதற்கு ஒத்துழையாமை, புறக்கணிப்பு ஆகியவற்றையே நான் பரிந்துரைப்பேன்.
அவதூறு மசோதா பற்றி துவா நினைவூட்டினார்.
நாடெங்கிலும் உள்ள பத்திரிகையாசிரியர்களைத் தொலைபேசி மூலம் அழைத்துப் பேசுவது என்பது அந்த காலகட்டத்தில் நாம் பயன்படுத்திய மிகச் சிறந்த வழிமுறையாக இருந்தது. ‘‘தயவுசெய்து இவ்வாறு செய்யுங்கள். உங்கள் நகரத்திற்கு ராஜீவ்காந்தியின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் யாராவது வந்தால், பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அவர் அவதூறு மசோதாவிற்கு ஆதரவானவரா அல்லது எதிரானவரா என்று முதலில் கேளுங்கள். அவர் பதிலளிக்காவிட்டாலோ அல்லது தெளிவற்ற பதிலை அளித்தாலோ, அல்லது அவர் ‘ஆம்’ என்று சொன்னாலோ நீங்கள் எழுந்து வெளியே வந்துவிடுங்கள்’’ என்று நாங்கள் அவர்களிடம் சொல்லுவோம்.
விளம்பரமே பயங்கரவாதிகளுக்கு ஆக்சிஜன் போன்று இருக்கிறது என்று மறைந்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் கூறுவார். இந்தக் கொத்தடிமைகளுக்கும் அதுவே ஆக்சிஜனைப் போன்று இருக்கிறது. தங்களுக்கு கிடைக்கும் விளம்பரங்கள், அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் ஆகியவற்றை மோடியிடம் காட்டுவதற்கு இந்தக் கொத்தடிமை அமைச்சர்கள் விரும்புவார்கள். எனவே அவர்களுக்கு கிடைக்கும் ஆக்சிஜனை மறுக்கும் வகையில், அவர்கள் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்புகளைப் புறக்கணியுங்கள்.
உங்கள் சந்திப்புகளுக்கோ அல்லது உங்களது நிகழ்ச்சிகளுக்கோ நீங்கள் அழைக்க விரும்பாத ஒருவரை அவர் அமைச்சர் என்பதற்காக அழைக்காதீர்கள், அவ்வாறான ஒத்துழையாமையைச் செயல்படுத்திப் பாருங்கள். அதன் விளைவுகளைப் பார்க்கலாம்.
எது செய்தி?
அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம் இந்தியாவைப் போன்று வேறு எந்த நாட்டிலும் வழங்கப்படுவதில்லை. அங்கெல்லாம் நீங்கள் அவற்றை விளம்பரம்தான் செய்ய வேண்டும். மாறாக, அரசாங்கத்தின் கூற்றுக்களை உண்மைகளைத் தோண்டியெடுத்து ஒப்பு நோக்கி மறுபதிப்பு செய்யும் ஆல்ட்-நியூஸ், எஸ்எம் ஹோக்ஸ்-ஸ்லேயர்ஸ், வாட் ஃபேக்ட் செக்கர்ஸ் போன்ற தளங்களைப் போன்று நீங்கள் செயல்பட வேண்டும்.
நரேந்திர மோடி, சரத்யாதவ் போன்றவர்களின் டுவிட்டுகளை பத்திரிகைகள் இன்று மறுபதிப்பு செய்து தங்களது பத்திரிகைகளில் வெளியிட்டு வருகின்றன. அவர்களின் டுவிட்டுகள் எந்த விதத்தில் அறிவுநுட்பம் கொண்டவையாக இருக்கின்றன? அவர்களது செய்தியை வெளியிடும் அதே இடத்தில், இன்று ஆல்ட்-நியூஸ் வெளியிட்டிருக்கும் செய்தியை நீங்கள் வெளியிடலாம். அதன் மூலம் உண்மையை அம்பலப்படுத்தலாம்.
இப்போது அவர்களின், அரசாங்கத்தின் நுட்பங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சிரமத்திற்குள்ளாக்கும் விஷயம் ஏதாவது இன்று நடந்தது என்றால், அவர்கள் உடனே வேறொரு கதையைத் தொடங்கி விடுவார்கள். இது அவர்களின் உத்திகளில் ஒன்றாக இருக்கிறது…
உங்கள் பார்வையாளர்களையும், உங்கள் வாசகர்களையும் திசை திருப்பும் கருவிகளாக நீங்கள் மாற வேண்டாம். முக்கியமான விஷயங்களின் மீது அவர்களது கவனம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களது வேலையை நீங்கள் செய்யாமலிருப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
அரசாங்கத்திற்கு எரிச்சலூட்டும் பணியை இருமடங்கு அதிகமாகச் செய்ய வேண்டும். நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கான சிறந்த உத்தரவாதம்’ உங்கள் செயல்பாடுகளின் மீது அரசாங்கம் கோபமடைவது என்பதுதான்.
‘‘அரசாங்கம் மறைக்க விரும்புவது மட்டுமே செய்தி, மற்றவையெல்லாம் விளம்பரங்களே’’ என்று அரூன் பூரி முழக்கமிடுவதாகவே நான் கருதுகிறேன். நீங்கள் அவற்றைத் தோண்டி வெளியே எடுத்துக் கொண்டு வர வேண்டும்.
வாழ்வா-சாவா பிரச்சனை
இறுதியாக, நமக்கு மூன்று வகையான பாதுகாப்புகள் மட்டுமே உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒன்று நம்முடைய ஒற்றுமை. இரண்டாவது நீதிமன்றம். எனவே, நீதித்துறையை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுங்கள்.
இது மிகவும் அவசியம். மூன்றாவது நமது வாசகர்கள், பார்வையாளர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பினைத் தருவது.
எனவே, நான் சொன்னது போல, அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்காக டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அது டுவிட்டர் உங்களைக் கையாளுவதாக இருக்கக் கூடாது. வாசகர்களுக்கான வாழ்வா, சாவா பிரச்சனைகளில் உண்மைத் தகவல்களின் அடியாழத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும்.
அப்போதுதான், உங்களுக்கெதிராக கைகள் உயர்த்தப்படும் போது, அந்த கைகள் தனக்கெதிராக உயர்த்தப்பட்டதாக வாசகர் கருதுவார்.
முக்கிய சேனல்கள் அல்லது ஊடகங்கள் மூலம் தகவல்களைப் பெறுவது, பரப்புவது ஆகியவை இன்னும் ஓராண்டிற்குள் இயலாமல் போய் விடும் என்பதை உறுதியாக நம்புகிறேன். எனவே ஹேக்கிங் செய்வது, அரசாங்கம் மேற்கொள்ளும் தணிக்கைகளைத் தவிர்ப்பது, இணையதளத்தைப் பயன்படுத்தி தகவல்களைச் சேகரித்தல், பரப்புதல் போன்றவற்றில் நிபுணத்துவம் உள்ளவர்களாக நமது இளைஞர்களை மாற்றுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
சீன அரசை ஏமாற்றிச் செல்லுவதற்கு சீனர்களால் முடியும் என்றால், நிச்சயமாக நம்மாலும் அதைச் செய்ய முடியும். அரசின் தணிக்கையிலிருந்து தப்பிக்கும் வகையில், உங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, இங்கே இந்தியர்கள் கொண்ட குழுக்களையோ அல்லது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களைக் கொண்ட குழுக்களையோ அமைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியும் என்றால் விரக்தி அடையத் தேவையில்லை.
ஏனென்றால், முன்பு நான் கூறியது போல, எல்லாமே கடந்து செல்லும். ஊடகங்களை அவர்கள் முழுமையாக கட்டுப்படுத்தும்போது, ஊடகங்கள் மூலமாக தங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைக் காண்பதற்கும், உண்மையில் தங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குமான வித்தியாசத்தை மக்கள் பார்ப்பார்கள்.
பசுக்களை வணங்குகின்ற இந்த அரசாங்கம் இறந்த பசுக்களைக் கொண்டதாக மாறும்.
நன்றி. உங்கள் போராட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
நன்றி: தி வயர் இணைய இதழ்.
முனைவர் தா. சந்திரகுரு,விருதுநகர்.
nulled wordpress themes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக