<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

செவ்வாய், 16 மே, 2017

போராட்டத்திற்கு காரணம் யார்?


பி.எஸ்.மருதநாயகம் சின்னாளபட்டி
தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் பொதுப்போக்குவரத்து முடங்கிப்போனது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்தான் இதற்குக் காரணம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடுவது பாமரத்தனம். வேலைநிறுத்தம் செய்வது போக்குவரத்து தொழிலாளர்கள் என்றாலும் கூட, தமிழக அரசும் அதன் அலட்சியமும்தான் போராட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளன என்பதுதான் முற்றிலும் உண்மை.
சரி பொதுமக்களுக்காகவே உழைத்து வந்த தொழிலாளர் வர்க்கம் இன்று பொதுமக்களை பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் போராட்ட ஆயுதத்தை ஏன் கையிலெடுத்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால்தான் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திலுள்ள தார்மீக நியாயமும், ஆட்சியாளர்களின் களவாணித்தனமும் ஒருசேர புலப்படும். இந்த போராட்டம் தொழிலாளர்களுக்கு விருப்பமானது அல்ல.பாதிக்கப்படும் பொதுமக்களை போலவே இந்த போராட்டத்தை தொழிலாளர்களும் வெறுக்கின்றனர்.கூடவே பொதுமக்களுக்கு சேவை பாதிப்பு ஏற்பட்டதற்கு வருந்தவும் செய்கின்றனர்.
ஏனென்றால்,அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளதுதானே! அந்த குடும்பங்களை வாழ வைக்கத்தானே இந்த போராட்டமே நடக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 23,000 அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன.நாடு முழுவதும் உள்ள 55 அரசு போக்குவரத்து நிறுவனங்களில் உற்பத்தித்திறன், வாகன பயன்பாடு,டீசல்,ஆயில் சேமிப்பு, பயணிகள் சேவை என அனைத்திலும் தமிழக போக்குவரத்துக் கழகங்கள் முன்னிலையில் உள்ளன. 40 லட்சம் மாணவர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற,நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள், ஊடக நிருபர்கள், சுதந்திரப் போர், மொழிப்போர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயாளிகள், சென்னை நகரில் 3 லட்சம் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு இலவச பேருந்து சேவை போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படுகிறது.
மேலும் தனியார் கல்வி நிறுவனத்தில் படிக்க மாணவர்களுக்கு சலுகைக் கட்டணம் அளிக்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் கடந்த காலங்களில் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டவை. இவற்றை ஆட்சியாளர்கள் ஓட்டு அரசியலுக்காக, தங்கள் சுய ஆதாயத்திற்காக வழங்கினார்களா அல்லது மக்கள் நலன் காத்தல் என்ற நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒற்றைப் பொதுச்சிந்தனையுடன் வழங்கினார்களா என்ற கேள்வி எழுவது இயல்புதான் என்றாலும் பொதுமக்கள் பயனடைகின்றனர் என்பதற்காகவே இந்த சலுகைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதே சமயம், போக்குவரத்தில் மக்களுக்கு சலுகைகள் வழங்கிய வகையில் ரூபாய் பல கோடிகள் செலவழிந்துள்ளதாக ஆட்சியாளர்கள் பொதுவெளிகளில் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கீடு செய்கின்றனர்.ஆனால்,சலுகைகளால் ஏற்படும் இழப்பீட்டுத்தொகைகளை முறையாக, உரிய காலத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்குவதில்லை. தினமும் சுமார் இரண்டு கோடி பேர் பயன்படுத்தும் சேவைத்துறையான போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கும் ஒதுக்கீட்டு நிதியையும் முழுமையாகத் தருவதில்லை.
இந்த நிலையில், ஆட்சியாளர்களை எதிர்த்து கேள்வியெழுப்பவோ, போதிய நிதியை போராடி கேட்டுப்பெறவோ தெம்பும்,திராணியும் இல்லாத போக்குவரத்துத் துறையின் உயரதிகாரிகள் நிதி பற்றாக்குறையை சமாளிக்க தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியப் பணம் சுமார் ரூ.7,000/- கோடியை சட்டவிரோதமாக எடுத்துச் செலவிட்டுள்ளனர். இதனால், கடந்த மூன்றாண்டுகளாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுக் கால பணப்பலன்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. ஓய்வூதியமும் முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால், தற்போது பணியில் உள்ளோர் மட்டுமன்றி, ஓய்வு பெற்று தளர்ந்த நிலையில், ஓய்வூதியத்தை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ள ஓய்வூதியதாரர்களும் கடுமையான சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், போக்குவரத்துத்துறை உயரதிகாரிகளின் நிதி முறைகேடுகள், சீரற்ற நிர்வாகச் செயல்பாடுகள் காரணமாக நிலுவையில் உள்ள ரூ.7,000 கோடியை விடுவிக்கும் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், ஊதிய உயர்விற்கான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்ற நிலை உள்ளதால் ஊதிய உயர்வும் தள்ளிப்போகிறது. கடந்த பல மாதங்களாகவே தொழிற்சங்கங்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தபோதும்,அவையனைத்தும் பலனற்றும் போனதுதான் உச்சகட்ட சோகம்.ஆட்டம் கண்டு போன ஆட்சிக்கட்டிலை கட்டிக்காப்பதற்கான போராட்டத்திலேயே ஆட்சியாளர்கள் பொழுதைப் போக்கினர். பலமுறை எச்சரித்தும், வேலைநிறுத்தப் போராட்டம் என்ற வார்த்தையை உச்சரித்தும் எவ்விதப் பயனுமில்லை என்ற நிலையில்தான், பொறுத்து பொறுத்துக் காத்திருந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் என்ற பேராயுதத்தை கையிலெடுத்துள்ளனர்.
தொழிலாளர்களின் துன்பத்தையும், பொது மக்களின் சிரமத்தையும் போக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுறச் செய்வதற்கு ஆட்சியாளர்கள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதை செய்யத் தவறினாலோ தொழிலாளர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த அறச்சீற்றத்திற்கும் ஆளாகி, அவதியுற நேரிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக