<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

செவ்வாய், 16 மே, 2017

பாஜகவின் இழிசெயல்களுக்கு திரிபுரா தக்க பதிலடி கொடுத்திடும் -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்




பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
பாஜக தலைவரான அமித் ஷா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி  அரசாங்கம் அகற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார். அவர் மேலும், மாநிலத்திலிருந்து இடதுசாரிகள் முழுமையாக வேருடன் பிடுங்கியெறியப்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் ஆசைகளைப்பூர்த்தி செய்திடும் நோக்கத்துடன் இப்போது அங்கே வன்முறை வெறியாட்டங்களை அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். திரிபுராவிற்கு அமித் ஷா பயணம் வருவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு, பாஜக குண்டர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது  தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்சியின்,  துக்லி உட்கோட்டக் குழுவின் செயலாளரின் வீடுகள் மீது வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தி, சூறையாடி இருக்கிறார்கள். மேலும் அவர்கள், இந்திய மாணவர் சங்க மாநில செயலாளரையும் தாக்கிக் காயமேற்படுத்தி இருக்கிறார்கள். அன்றிரவே கமல்பூர் உட் கோட்டத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்கள் தொடுத்துள்ளார்கள். இதில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து, அதே உட் கோட்டத்தில் சலீமா என்னுமிடத்தில் மார்க்சிஸ்ட் ஊழியர்கள்மீது தாக்குதல்கள் தொடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், பாஜகவினர் மீது தாக்குதல் தொடுத்து,  அராஜக  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அமித் ஷா குற்றம் சொல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே அவர்களால் திட்டமிட்டு இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன.
அஸ்ஸாம் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப்பின்னர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களான  அருணாசலப் பிரதேசத்திலும், மணிப்பூரிலும் பாஜக தலைமையிலான அரசாங்கங்கள் அமைக்கப்பட்டபின்னர், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் தற்போது திரிபுராவின் மீதும் அதன் இடது முன்னணி அரசாங்கத்தின் மீதும் குறி வைத்திருக்கிறது. மாநிலத்தில் செயல்பட்டு வந்த காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அணியினர் மத்தியில் அரிப்பு ஏற்பட்டு அவர்கள் பாஜக பக்கம் சாய்ந்தபின்னர்,  அவர்களுக்கு அதிக  அளவில் தைரியம் ஏற்பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்-இன் உதவியுடன் திரிபுராவில் செயல்படும் அனைத்து கம்யூனிச விரோத சக்திகளையும் ஒருமுகப்படுத்திவிடலாம் என்று பாஜக நம்பிக்கொண்டிருக்கிறது.
எனினும், வடகிழக்கு மாநிலங்களில்  மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் திரிபுரா தனி வார்ப்பாலானது என்பதையும்,  இங்கே மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் மத்தியில் மிகவும் ஆழமாக வேரூன்றி வலுவான முறையில் இருக்கிறது என்பதையும் அதனை, தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும்   பாஜக உணர்ந்திடவில்லை. மாநிலத்தில்  பழங்குடியினர் மற்றும் பழங்குடியல்லாதவர் இடையே ஒற்றுமையைக் கட்டி எழுப்பியிருப்பதன் மூலம் இடது முன்னணி மக்கள் மத்தியில் மகத்தான சேவைசெய்து அவர்களிடையே ஆழமாக வேரூன்றியிருப்பதை அது எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது.
இவ்வாறு மலைப்புத்தரத்தக்கபணியை எதிர்கொண்டுள்ள ஆர்எஸ்எஸ்-உம் அதன் பல்வேறு அமைப்புகளும் மாநிலத்தில் தங்களுடைய இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை மிகவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதற்காக ஆர்எஸ்எஸ்/பாஜக ஊழியர்கள், இடது முன்னணி குறித்துத் தவறான தகவல்களைப் பரப்புவதற்காக ஏராளமாக செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்.
இதற்காக, பாஜகவும் முன்பு காங்கிரஸ் கட்சி செய்ததைப்போலவே, திரிபுராவில் செயல்பட்டுவந்த தீவிரவாதக் கட்சிகளான ஐபிஎப்டி மற்றும் ஐஎன்பிடி (IPFT & INPT) ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பழங்குடியின தீவிரவாத சக்திகளுடன் பாஜக கைகோர்த்துக் கொண்டிருப்பதை, ஆர்எஸ்எஸ் தன் வார இதழான “ஆர்கனைசர்” இதழில்  பாராட்டியிருக்கிறது.  “சுதந்திர திரிபுரா” அமைத்திடுவோம் என்று அறைகூவல் விடுத்துள்ள தீவிரவாத  அமைப்பின் அரசியல் பிரிவுதான் ஐபிஎப்டி (IPFT) என்பது இங்கே நினைவுகூரப்பட வேண்டிய ஒன்றாகும். இப்போது அது, தற்போதுள்ள பழங்குடி சுயாட்சி மாவட்டக் கவுன்சில் பகுதியை தனி மாநிலமாக மாற்ற வேண்டும் என்று தன் கோரிக்கையை சற்றே மாற்றியிருக்கிறது. இவ்வாறு இம்மாநிலத்தில் மிகவும் கடினமாகப் போராடி, பழங்குடியினர் – பழங்குடியல்லாதவர் இடையே கட்டப்பட்ட ஒற்றுமையை பாஜக தங்கள் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக சீர்குலைத்திட  முன்வந்திருப்பதை பாஜகவின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.
பாஜக மேற்கொண்டுள்ள மற்றுமொரு இழிமுயற்சி என்பது இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகவும், முதலமைச்சர் மாணிக் சர்க்காருக்கு எதிராகவும் அது மேற்கொண்டுள்ள துர்ப்பிரச்சாரமாகும்.  மத்திய அமைச்சர்கள் திரிபுராவிற்கு அடிக்கடி வந்து, மாநில அரசாங்கம் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அறிக்கைகள் முறையாக அனுப்பிடவில்லை என்று குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகால இடது முன்னணியின் ஆட்சியில் திரிபுராவில் வளர்ச்சியே இல்லை என்று அமித் ஷா கூறிக்கொண்டிருக்கிறார். முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் சீட்டு நிறுவன ஊழல்களில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்கள் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக் கின்றனர்.  முதலமைச்சர் தன் நேர்மையை நிரூபித்திட, சீட்டு நிறுவன வழக்குகளை  மத்திய குற்றப்புலனாய்வுக் கழகத்திற்கு (சிபிஐ-க்கு) மாற்றுவாரா என்று அமித் ஷா சவால் விடுத்திருக்கிறார்.
இவ்வாறு துர்ப்பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதுடன் மத்திய பாஜக அரசாங்கம், மாநில அரசாங்கத்தின்  நலத் திட்டங்கள் அமலாக்கத்தையும் முடக்கிட நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதச்  சட்டத்தின்கீழ் திரிபுராவிற்கு ஒதுக்க வேண்டிய தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை மத்திய அரசு வெட்டிக் குறைத்திருக்கிறது.  இத்திட்டத்தை நாட்டில் அமல்படுத்திய  மாநிலங்களில் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு 88 நாட்கள் வரை வேலையளித்து கடந்த நான்கு ஆண்டுகளாக திரிபுரா தொடர்ந்து முதல் மாநிலமாக விளங்கி வந்தது. இதனை இப்போது முடமாக்கிட பாஜக நடவடிக்கை எடுத்திருக்கிறது.
திரிபுரா மாநிலத்தில் முதலமைச்சர் மாணிக் சர்க்காரின் சித்திரத்தை உருக்குலைத்திட முடியும் என்று பாஜக நம்புமானால் அது முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றே பொருளாகும். சாரதா, ரோஸ் வாளி மற்றும் பல்வேறு சீட்டு நிறுவன ஊழல்கள் வெளிவந்த உடனேயே, முதலமைச்சர் மத்திய அரசாங்கத்திற்கு இவற்றின்மீது விசாரணை நடத்திட மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ-இன்) விசாரணையைக் கோரி கடிதம் எழுதினார்.   சிபிஐ-யும் மொத்தம் உள்ள 37 வழக்குகளில் ஐந்து வழக்குகளை விசாரணை செய்தது. மீதம் உள்ள 32 வழக்குகள் திரிபுரா உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிறப்பு அதிரடிப்படை விசாரித்துக் கொண்டிருக்கிறது.
இடது முன்னணி அரசாங்கத்தின்  நிகரற்ற நேர்மையான செயல்பாடுகளின் முன்னால், இத்தகைய பாஜகவின் பொய்யும் புனைசுருட்டும் கலந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. நாட்டில் மிக உயர்ந்தபட்ச எழுத்தறிவு விகிதத்தைத் திரிபுரா பெற்றிருக்கிறது. மக்களின் தனிநபர் ஆண்டு வருமானமும், வடகிழக்கு மாநிலங்களில் திரிபுராவில்தான் மிக உயர் நிலையில் இருந்துவருகிறது.  வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்தியதிலும்  நாட்டிலேயே திரிபுராதான் முதல் மாநிலமாக விளங்குகிறது. சுமார் 1.28 லட்சம் பழங்குடியினக் குடும்பங்கள் கூட்டுப் பட்டாக்கள் பெற்றிருக்கின்றன. மகாத்மாகாந்தி தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழான திட்டத்தை அமல்படுத்தியதிலும் திரிபுரா சிறந்து விளங்குகிறது.  கிராமப்புற வளர்ச்சியில்  நாட்டில் முன்னணியில் உள்ள முதல் ஐந்து மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று.
திரிபுரா இடது முன்னணி அரசாங்கம் தொடர்ந்து ஏழு தடவை ஆட்சி செய்து தன் ஆட்சிக்காலத்தை நிறைவு செய்திட இருக்கக்கூடிய சூழலில், மக்களிடையே ஜனநாயக உணர்வு மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளாக நடத்திவந்த போராட்டங்களின் விளைவாக மக்கள் மத்தியில் பல்வேறு இனத்தினரிடையேயும் வலுவான  ஒற்றுமை உணர்வும், நல்லிணக்க உணர்வும் உருவாகியுள்ளது.   எனவே திரிபுரா மாநிலத்தில் பாஜக/ஆர்எஸ்எஸ் கூடாரத்தின் மதவெறி மற்றும் படுபிற்போக்குத்தனமான  இழிசெயல்களுக்கு திரிபுரா  மக்கள் தக்க பதிலடி கொடுத்திடுவார்கள்.
(மே 11, 2017)
தமிழில்: ச.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக