<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

செவ்வாய், 16 மே, 2017

அடக்குமுறை பலிக்காது

மாநில அரசின் அடக்குமுறை தர்பாரை தகர்த்தெறிந்து, கருங்காலித் தனத்தை முறியடித்து அரசு போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வேலைநிறுத்தத்திற்கு முழுப் பொறுப்பையும் பொறுப்பற்ற அதிமுக அரசே ஏற்றாக வேண்டும். அரசுடன் நடத்திய பலகட்டப் பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், நியாயமான கோரிக்கைகளின் ஒரு பகுதியைக் கூட அரசு ஏற்காத நிலையில்தான் தொழிற்சங்க கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்று தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் வேறுவழியின்றி இறங்கியுள்ளனர். 12வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 21ந்தேதி முடிவடைந்தநிலையில் செப்டம்பர் 1ந்தேதி புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் அரசுடன் பல சுற்றுகள் பேசின.
புதிய ஊதிய ஒப்பந்தம் மட்டுமின்றி ஓய்வூதியம் வருங்கால வைப்பு நிதி வழங்குவது, போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மே 15ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் முன்கூட்டியே அறிவித்திருந்தன. பேச்சுவார்த்தையின்போது 750 கோடி ஒதுக்கப்படும் என்று அரசு தெரிவித்த நிலையில், இது எந்தவகையிலும் போதாது என தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மேலும் 500 கோடி வழங்க முதல்வர் ஒத்துக்கொண்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இது செப்டம்பரில்தான் வழங்கப்படும் என்பதை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை. ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.2000 கோடி வழங்க வேண்டும், மீதித்தொகை எப்போது வழங்கப்படும் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியது. ஆனால் அமைச்சர் 750 கோடி ஒதுக்கியதையே தங்களது காருண்யத்தின் வெளிப்பாடாக பேசி வந்தார். போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி முறையாக வழங்கப்படுவதில்லை.
இதனால் ஓய்வுபெற்ற காலத்தில் குடும்பத்தை நடத்த வழியின்றி பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நெடிய போராட்டத்தை நடத்தியும் அரசு நியாயமான முடிவுக்கு வரவில்லை.  இந்தப் பின்னணியில்தான் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. சில ஊடகங்கள் பொதுமக்க ளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பாசாங்கு செய்வது நியாயமற்றது. தொழிலாளர்களும் பொதுமக்கள்தான், அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்து அடக்குமுறை மூலம் ஒடுக்க முயல்வது நியாயமல்ல. விவசாயிகள் போராட்டத்திற்கு துணை நின்றது போல அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக