<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

செவ்வாய், 16 மே, 2017

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க களத்தில் இறங்குவோம்!

தீக்கதிர் கட்டுரை
--------------------------
ஜி.ராமகிருஷ்ணன்


கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்ல காலம்பிறக்கும் என்று நரேந்திரமோடி கூறினார்.ஆட்சியமைத்த பிறகும் நல்லகாலம் விரைவில் வரப்போகிறது என்று கூறினார். ஆனால் நல்லகாலம் யாருக்கு என்பதே கேள்வி? மோடியின் 3 ஆண்டுஆட்சிக்காலத்தில் நல்லகாலம் மக் களுக்கல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கூற்றுப்படியே 2014 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 12,360 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12,602 ஆகும். 2016ல் தமிழகத்திலும் சுமார் 400 விவசாயிகள் தற்கொலை அல்லது அதிர்ச்சிகாரணமாக உயிரிழந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 30 ஆயி ரத்துக்கும்(தமிழகத்தில் 400 விவசாயிகள் உட்பட) அதிகமான விவசாயிகளின் தற்கொலை நிகழ்ந்துள்ளது. மறுபுறம் கார்ப்பரேட் கம்பெனிகளின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகையில் மேல்தட்டிலுள்ள ஒரு சதவீதம் குடும்பங்கள் தேசத்தின் மொத்த சொத்தில் 49 சதவீதம் வைத்திருந்தனர்.
தற்போது இது 58.34 சதவீதமாக உயர்ந்துள்ளது. நரேந்திர மோடி கூறிய நல்லகாலம் என்பது கார்ப்பரேட் உள்ளிட்ட மேல்தட்டில் உள்ள ஒரு சதவீத குடும்பங்களுக்கு தான் வந்துள்ளது, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மோடியின் ஆட்சி மிக மிக கெட்டகாலமாக உள்ளது.
ஏன் இந்த நிலைமை?
தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு ஒரு வாக்குறுதி அளித்தார். விவசாயத்தில் சாகுபடிக்கு ஆகும் செலவைவிட 1.5 மடங்கு கூடுதலாக விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை தருவோம் என்று பல கூட்டங்களில் மோடிமுழங்கினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தர்பல்டி அடித்தார்.
இது தொடர்பான வழக்கு ஒன்றில் மோடி அரசாங்கம் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் விவசாயிகளுக்கு 1.5 மடங்கு கூடுதலாக விலை தருவது சாத்தியமல்ல.
விரும்பத் தக்கதுமல்ல என்று கூறியது. தான் ஆட்சிக்கு வந்தால் ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைதருவோம் என நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் வெறும் 1 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டதாக அரசின் புள்ளிவிவரமே கூறுகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம் விஸ்வரூபம் உருவெடுத்துள்ளது.அடுத்த 3 ஆண்டுகளில் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் 6 லட்சம் பேர் வேலைஇழப்பார்கள் என பல ஆய்வு நிறுவனங்கள் அபாய சங்கு ஊதியுள்ளன. எல்.என்.டி போன்ற உற்பத்தி நிறுவனம் கூட 14 ஆயிரம்பேரை வேலை நீக்கம் செய்துள்ளது. மோடி யின் ஆட்சியில் வேலை வாய்ப்பு கூடுவதற்கு பதிலாக இருக்கின்ற வேலைவாய்ப்புகளும் பறிக்கப்பட்டுவருகின்றன. அதே சமயத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 4 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசாங்கம் சலுகை அளிக்கிறது.
விவசாயிகள் தேசிய வங்கிகளிடமிருந்து பெற்ற விவசாயக்கடனை ரத்துசெய்யவோ அல்லது விளைபொருளுக்கு நியாயமான விலை தரவோ தயாராக இல்லை. தில்லியில் 40 நாட்கள் தமிழக விவசாயிகள் போராடினர். பிரதமர் மோடியை சந்திக்க வேண்டுமென்று பலமுறை வேண்டினர். ஆனால் அவர்களை சந்திக்க மோடிமுன்வரவில்லை. அதேசமயத்தில் கார்ப்பரேட் அதிபர் கவுதம் அதானியை தன்னுடன் விமானத்தில் ஆஸ்திரேலியா விற்கு அழைத்து சென்றது மட்டுமல்ல அங்கேயே நிலக்கரி சுரங்கத்தை வாங்க அதானிக்கு ரூ.6 ஆயிரம் கோடி பாரத ஸ்டேட்வங்கி மூலமாக ஒரு சில நிமிடங்களில் கடன் வழங்கினார்.
தேசிய வங்கிகளுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய கடனை வசூல் செய்வதற்கு கடுமையான கெடுபிடிகள் செய்யப்படு கின்றன. விவசாயிகளின் நகைகள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படுகின்றன. ஆனால் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வராக்கடனை வசூலிக்க மத்திய அரசுக்கு வகையில்லை. வரலாறு காணாத வறட்சியாலும் மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைகளாலும் தமிழக மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாகி யுள்ளனர்.
வாழவழியின்றி விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கிராமங் களை விட்டு வெளியேறும் அவலநிலை உருவாகியுள்ளது. கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்ப்புறங்களில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு குடம் தண்ணீரை ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கொடுத்துவாங்கும் நிலை உள்ளது. குடிநீர் பற்றாக் குறையை போக்க அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
விவசாயத்தொழிலாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் தரும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி அரசு சீர்குலைக்க முயல்கிறது. இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. பயனாளி களுக்கு ஊதியம் தரப்படாமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகமுறையை மத்திய அரசு வேகமாக சீர்குலைத்துவருகிறது. அதற்கான நிதிஒதுக்கீட்டை பாதியாக குறைத்துள்ளது. மண்ணெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை நியாயவிலைக் கடைகளில் வழங்கக்கூடாது என கூறி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு.
தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் மோடி அரசு மறுபுறத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தி மக்கள் ஒற்றுமையை, மதநல்லிணக்கத்தை குலைக்கிறது. மாட்டிறைச்சி அரசியலை முன்னெடுத்து, தலித் மற்றும் சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிறது.
திராணியற்ற அதிமுக அரசு
அடுக்கடுக்காக மத்திய அரசு மாநில மக்கள் மீது தாக்குதல் தொடுத்தாலும் அ.இ.அ.தி.மு.க வின் இரண்டு கோஷ்டி களும் மத்திய அரசாங்கத்தை எதிர்க்க திராணியின்றி வாய்மூடி மௌனிகளாக உள்ளனர். ஓ.பி.எஸ் கோஷ்டியும், இ.பி.எஸ் கோஷ்டியும் அதிகாரப்போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு கோஷ்டிகளை சேர்ந்தவர்களும் ஊழல் குற்றச்சாட்டுக் களுக்கு ஆளாகியுள்ளனர்.
சேகர்ரெட்டி வீட்டில் கோடி கோடியாகபணமும் தங்கக்கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. தற்போது சேகர் ரெட்டியிட மிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், தான் அடித்த கொள்ளையில் ஒரு பகுதியான 300 கோடியை பல அமைச்சர் களுக்கும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த டைரியில் 68 பேர் கொண்ட பட்டியல் உள்ளது எனவும்கூறப்படுகிறது. இந்தப்பட்டியல் பகிரங்கப் படுத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளை யும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்தியில் உள்ள பாஜக அரசாங்கம் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை ஆயுதமாக பயன்படுத்துகிறது. ஆனால் ஊழல் செய்தவர்கள் மீது உண்மையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசாங்கம் முன்வரவில்லை.
ஊழலில் சிக்கியுள்ள அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. மாநில அரசாங்கம் செயலிழந்துள்ளது. மக்கள் பிரச்சனைகளைப்பற்றி கவலைப் படாத அரசாங்கமாகவுள்ளது. பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடியை மாநில அரசு செலுத்த மறுத்து வருகிறது. ‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்’- என்பதுபாரதியின் கூற்று. அதற்கிணங்க வேற்றுமை யில் ஒற்றுமை எனும் கோட்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் நாடு இந்தியா.
ஆனால் மதம், மொழி, இன அடிப்படையில் மக்களைபிளவுப்படுத்த முயலும் மோடி அரசு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழியை திணிக்க முனைகிறது.இத்தகைய பின்னணியில்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு, மத்திய குழுவின் அறைக்கூவலுக்கு இணங்க மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மே 15 முதல் 21 வரை மாநிலம் தழுவிய மகத்தான பிரச்சார இயக்கங்களை நடத்துகிறது. இது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் போராட்டம் மட்டுமல்ல. தேசம் காக்கும் போராட்டமும் ஆகும். இதற்கு தமிழக மக்கள் பேராதரவு தர வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக