<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

திங்கள், 29 மே, 2017

‘நாட்டின் மீதான கவலையை விட மாட்டின் மீதுதான் கவலை’ மோடி மீது கோவை கருத்தரங்கில் சாடல்


நன்றி = தீக்கதிர்


கே.சுப்பராயன்,மதுக்கூர் ராமலிங்கம்,பர்வீன்சுல்தானா
கோயம்புத்தூர், ஜூன் 1-
இந்திய தொழிற்சங்க மையத்தின் 47 ஆவது அமைப்புதினம் மற்றும் தமிழக தொழிற்சங்கத் தலைவர் தோழர் கே.ரமணி நூற்றாண்டு நிறைவுவிழா மக்கள் ஒற்றுமை கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ஆற்றிய உரை வியாழனன்று வெளியானது. கருத்தரங்கில் பேசிய மற்ற தலைவர்கள் உரை வருமாறு:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.சுப்பராயன் பேசியதாவது:மோடி வகையறாக்கள் இந்திய மண்ணின் மரபுகளை தூக்கி நிறுத்துபவர்கள் போல் பாசாங்கு செய்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் இந்த மண்ணுக்கும் மரபுக்கும் ஒட்டோ உறவோ எப்போதும் இருந்தது கிடையாது. இவர்கள் சொல்கிற ஒற்றை சிந்தனையை நமது முன்னோர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. உலகில் எந்த ஒரு நாட்டை காட்டிலும் இந்திய நாடுதான் சிந்தையில் ஆயிரம் என்கிற கருத்தை முன்வைத்தது. ஒற்றை சிந்தனையை அல்ல.
ஓராயிரம் சிந்தனை எல்லா சிந்தனையும் எடையிட்டு மதிப்பீடு செய்கிற பரந்த பாரத கண்டத்தில், இதற்கு எதிராக ஒற்றைச் சிந்தனையை முன்வைக்கிற அரக்கச் சேட்டை அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது. இவர்கள் ராமனின் பெயரில் அதிகாரத்தை கைப்பற்றி இருந்தாலும், உள்ளடக்கத்தில் இவர் கள் ராவணாளிகள்தான். ராமனின் பெயரை உச்சரிக்கிற தார்மீக அருகதை கூட மோடிக்கோ இவர்களின் பரிவாரங்களுக்கோ இல்லை. வேதங்களை கண்டு ஏமாறவேண்டாம் என்று நமது இதிகாசங்கள் பலவும் சொல்கின்றன. ஆனால் இந்த நிமிடம்வரை வேதங் களை கண்டு ஏமாறுவது இயல்பான நடைமுறையாக மாறியுள்ளது. விவேகானந்தர் பசுமாட்டை பற்றி என்ன சொன்னார் என்பதை கொஞ்சமாவது நேர்மை, நாணயமானவராக இருந்தால் மோடி சொல்ல வேண்டும்.
விவேகானந்தர் ஒன்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்ல. பசுவை பாதுகாக்கிறோம் என்று வந்தவர்களிடம் மனிதர்களை காட்டிலும் வேறு யாரையும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என விவேகானந்தர் இடித்துரைத்தார். மாட்டைக்காட்டிலும் மனிதர்களை நேசிக்க வேண்டும் என்ற விவேகானந்தரை நீங்கள் ஏற்கப்போகிறீர்களா இல்லையா? சுதந்திர இந்திய வரலாற்றில் இன்றுபோல் என்றுமே இதுபோன்ற நெருக்கடி சூழ்ந்து கவ்விப் பிடிக்கவில்லை. நம்மால் தலையீடு செய்ய முடியாத அளவிற்கு ஆழமான புரையோடிப்போன ஒரு நெருக்கடி இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இவற்றை முடிவுக்குகொண்டு வரவேண்டிய வரலாற்று கடமை ஒவ்வொருவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வேடதாரிகள் தலித்துகளுக்கு ஒரு முகமூடி, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு ஒரு முகமூடி என எத்தனை முகமூடிகள் அணிந்துவருகிறார்கள். உண்மை முகத்தை மறைத்துக்கொண்டு ஒப்பனையோடு காட்சியளித்துக்கொண்டிருக்கிற கட்சிதான் பாஜக. அது உள்ளடக்கத்தில் தேசவிரோத கட்சி.இவ்வாறு சுப்பராயன் பேசினார்.
மதுக்கூர் ராமலிங்கம்
“இந்தியாவில் மதச்சார்பின்மை’’ என்கிற தலைப்பில் தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதால்தான் ஒரேநாடாக இருக்கிறது. இல்லையென்றால் பலநூறு நாடுகளாக சிதறிப்போயிருக்கும். மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கு இந்த நாட்டை துண்டாட வேண்டும் என்கிற சிந்தனை உள்ளது. ஆனால் நமக்கு இந்த நாடு பிரிந்து போய்விடக்கூடாது என்கிற கவலையின் காரணமாகவே செங்கொடி இயக்கங்கள் இதுபோன்ற கருத்தரங்கங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன.
எந்த உத்தரவு
மோடிக்கு நாட்டின் மீதான கவலையை விட மாட்டின் மீதான கவலைதான் உள்ளது. இதனை எதிர்த்து கேரளத்தின் முதல்வர் கம்பீரமாக எழுப்பிய குரல் தமிழகத்தில் எழவில்லை. இந்த மாட்டுப் பிரச்சனை குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு உத்தரவு வரவில்லை, படிக்கவில்லை என்கிறார். எந்த உத்தரவு என்பது நமக்கு தெரியவில்லை. ஒருவேளை இதுகுறித்து கருத்து சொல்ல பிரதமர் எந்த உத்தரவும் இவருக்கு விடவில்லையோ என்கிற சந்தேகம் வருகிறது.
அசைவ உணவு சாப்பிட்டு ஆகவேண்டும் என யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. அதேநேரத்தில் எனது உணவு உரிமையை பறிப்பதற்கு ஒருபோதும்அனுமதிக்க முடியாது. சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி திருவிழா நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மாடுகள் மீது கருணை காட்டுவதாக சொல்லும் இவர்கள் மனிதர்கள் மீது காட்ட மறுப்பது ஏன்? தலித் வீட்டில் சாப்பிட்டால் தலித்மக்களின் ஆதரவைப்பெறலாம் என யாரே சொல்லக்கேட்டு ஊழலுக்கு பெயர் பெற்ற கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தலித் வீட்டிற்கு சரவணபவன் ஓட்டல் இட்லியை பார்சல் எடுத்துப்போய் சாப்பிடுகிறார்.
இன்னொருவர் உத்தரப்பிரதேச முதல்வர் தலித் மக்களிடம் சோப்பு, சாம்பு கொடுத்து நன்றாக குளிக்கவைத்துவிட்டு பிறகு சந்தித்துள்ளார். இதுதான் இவர்களின் தலித் பாசம். அரசும் மதமும் தள்ளி இருக்க வேண்டும். அதுதான் மதச்சார்பற்ற அரசு, மதம் என்பது அவரவர் தனிப் பட்ட நம்பிக்கை.இந்தியாவின் பன்மைத்துவம்தான் அழகு. மதச்சார்பற்ற நாடாக இருப்பதுதான் நமது பெருமை. மூன்றாண்டு கால ஆட்சியின் தோல்வியை மறைப் பதற்கு பாசிச தத்துவத்தின் பேரால் மக்களை பிரிக்க நினைக்கிறார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கிறபோதுதான் இந்த ஒற்றுமை நிலைக்கும். அந்த ஒற்றுமையை எங்கள் உயிரைகொடுத்தாவது காப்போம் என்றார் மதுக்கூர் ராமலிங்கம்.
பர்வீன்சுல்தானா
இக்கருத்தரங்கில் பங்கேற்று முனைவர் பர்வீன் சுல்தானா பேசுகையில், இந்த உலகத்தில் பெரிய சவால் எது என்றால் நான் எந்த அடையாளத்திற்குள் இருக்கிறேனோ அந்த அடையாளத்தை சுமையாக சுமத்தப்பட்டு பார்க்க வைப்பது மிகவும் வலியானது. இந்த வலியை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். நான் ஒரு இஸ்லாமியன் என்கிற அடையாளத்தை எப்போதும் மறைத்ததில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் சார்ந்திருக்கிற மார்க்கம் இஸ்லாமாக இருந்தாலும் நான் தமிழச்சி. இங்குள்ள அனைத்து பண்பாடு, கலாச்சாரங்கள் அனைத்தும் என்னுடையது என்பதில் நான் உறுதியோடு இருக்கிறேன்.
400 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய முன்னோர்கள் இந்த மண்ணுக்குரியவர்கள். இந்த தொப்புள் கொடி உறவை அறுக்க நினைப்பவர்களை நான் வெறுக்கிறேன்.பலநேரங்களில் தொலைக்காட்சிவிவாதங்களில் என்னை பேச அழைப்பவர்கள் என் மதம் சார்ந்தே பேச அழைக்கிறார்கள். இதில் சில அறுவடைகள் செய்வது அங்கேயும் நடக்கிறது.அவரவர் மதத்தின் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இந்திய அரசியல் சட்டம் வரையறுத்திருக்கிறது. இந்த சிந்தனையோடு எல்லோரும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

இன்று உள்ள சூழல், நம்முடைய ஒற்றுமையை குலைக்கும் விசயங்களை எதிர்த்து போரிட வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. உழைப்பாளி மக்களாகிய நீங்கள் உங்களின் ரத்தத்தை தற்போதைய கொதிநிலையிலேயே வைத்திருங்கள். அடுத்த தலைமுறைக்கு ஏதேனும் விட்டுப்போகிறோம் என்றால் எந்த மதம் சார்ந்த கட்சிகளையும் அனுமதிக்க விடாதீர்கள். என்னுடைய வளர்ச்சி முக்கியமில்லை நான் சார்ந்திருக்கிற சமூகம் முன்னேறவேண்டும் என்கிற சிந்தனை வந்தாக வேண்டும் என்றார் பர்வீன் சுல்தானா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக