<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

வெள்ளி, 2 ஜூன், 2017

தமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்! சிபிஎம் மாநிலக்குழு அழைப்பு

தீக்கதிர் செய்தி 

கோயம்புத்தூர், ஜுன் 2-
கோவையில் ஜுன் 1, 2 தேதிகளில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, உதய் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் பொதுவிநியோக முறையை சீர்குலைக்கும் நடவடிக்கை, சேலம் உருக்காலை உள்ளிட்டு பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவு தேச பொருளா தாரத்தையும், அனைத்துப் பகுதி மக்களது வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. ஜி.எஸ்.டி. சட்டத்தைப் பயன்படுத்தி சில பொருட்களுக்கு ஏற்கெனவே 14 சதவிகிதமாக இருந்த வரியை 28 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
இதனை எதிர்த்து வணிகர்களும், மருந்துக் கடை வியாபாரிகளும் கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளார்கள்.விவசாய விளை பொருட்களுக்கு அடக்கவிலையுடன் 50 சதமானம் உயர்த்திக் கொடு ப்போம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி கொடுத்த மோடி அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறிவிட்டது. கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைத்துள்ளது.
மத்திய பாஜக அரசு - சங்பரிவார் அமைப்புகளின் வகுப்புவாத நடவடிக்கை
நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தலித் மக்கள் மீது பல மாநிலங்களில் சங்பரிவார் அமைப்புகள் தாக்குதல் தொடுக்கின்றன. இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை சந்தைகளில் விற்பதற்கும், வாங்குவதற்கும் தடை விதித்து ள்ளது. இது மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என்பதோடு விவசாயிகளையும், கிராமப்புற பொருளாதாரத்தையும் கடுமை யாக பாதிக்கிறது. இடதுசாரிகள் ஆளும் கேரளா, திரிபுரா மாநில அரசுகள் இதனை ஏற்கமாட்டோம் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மோடி அரசின் மூன்றாண்டுகால ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வி யைச் சந்தித்துள்ள அரசியல் பின்னணியில் இந்தத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவை ஆட்சேபித்த காரணத்திற்காக சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் சூரஜ் என்ற மாணவர் சங்பரிவார் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு
கடந்த மூன்றாண்டு காலமாக மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு திணிப்பு, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமலாக்கிடும் முயற்சி, வர்தா புயலுக்கும், வறட்சி நிவாரணத்திற்கும் ரூ. 61,000 கோடி மாநில அரசு மத்திய அரசிடம் நிதி கோரிய போது, மத்திய அரசு வர்தா புயலுக்கு வெறும் ரூ.264.11 கோடியும், வறட்சிக்கு ரூ.1725 கோடியும் மட்டுமே ஒதுக்கீடு செய்தது. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு தீர்மானித்து,இதுவரை எந்த அசைவும் இல்லை;
பல்வேறு மத்திய அமைச்சகங்கள் தமிழகத்துக்கு சேர வேண்டிய ஒதுக்கீடு பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கிவைத்துள்ளன. மொத்தத்தில் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் பாக்கி வைத்திருக்கும் தொகை ரூ. 16,959 கோடி. 2015-16க்கான பயிர் காப்பீட்டு பிரீமியம் ரூ.168 கோடியை மத்திய அரசு உரிய நேரத்தில் செலுத்தாததால் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு தாமத மாக வழங்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்டு இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்க பல வழிகளில் மத்திய அரசு முயற்சித்து வருகிறது. பலத்த நிர்ப்பந்தத்துக்குப் பிறகு கீழடியில் அகழாராய்ச்சியைத் தொடர மத்திய அரசு அனுமதித்தாலும் தொல்லியல் துறை அதிகாரி மாற்றம் உள்ளிட்ட பல முட்டுக்கட்டைகளைப் போட்டு சீர்குலைக்கிறது.
தமிழகத்தின் மோசமான நிலை
தமிழக பொருளாதார நிலைமை சமீப காலங்களில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மோசமடைந்து வருகிறது. பருவமழைபற்றாக்குறையால் ஏற்பட்ட கடும் வறட்சிபாதிப்பு, வேளாண் உற்பத்தியும் விவசாயி களின் வாழ்வும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சுமார் 300 பேர் தற்கொலை (அ) மாரடைப்பால் இறந்துவிட்டனர். வேலையின்றி விவசாயத்தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். இதர கிராமப்புற கூலி உழைப்பாளிகளின் நிலைமையும் இதேதான். மாநிலம் முழுவதும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஒருகுடம் தண்ணீர் ரூபாய் 5, 10/-க்கு விற்பனை ஆகும் நிலைமை உருவாகியுள்ளது. மாநிலத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் வேலையின்மை அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் மொத்தக் கடன் வேகமாக அதிகரித்து வருகிறது. 2002-2003-இல் 43,815 கோடி ரூபாயாக இருந்த இக்கடன் 2018 மார்ச் மாத இறுதியில் இது 3,14,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாக உள்ளன. நியாயமான கோரிக்கை களுக்காக ஜனநாயக அமைப்புகள் இயக்கம்நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.
மக்கள் கோரிக்கைகளுக்காக போராடும் ஜனநாயக அமைப்புகளையும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்று போராடக்கூடிய பெண்களையும் மூர்க்கத்தனமாக தாக்கும் காவல்துறை, கூலிப்படை யினரின் மீதோ, சமூக விரோதிகள் மீதோ நடவடிக்கை எடுப்பதில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் தீர்மானி க்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலான கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன.
சேகர் ரெட்டி துவங்கி பல்வேறு அமைச்சர் களின் வீடுகள், அலுவலகங்கள் வரை அமலாக்கத் துறை பிரிவு, வருமான வரி துறை பிரிவுகளின் ரெய்டுகள் இக்கால கட்டத்தில் நடந்தாலும், மேற்கொண்டு நடவடிக்கைகள் இல்லை. கறாராக நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தை விட, அதிமுகவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் மத்திய அரசின் நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது. தலைமை செயலகத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் ஆய்வு, துணை வேந்தர் நியமனங்களில் ஆளுநர் தலையீட்டின் அரசியல் போன்றவை அப்பட்டமாக பாஜகவின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
மாநில உரிமைகள் மீறல், தமிழக நலனுக்கு துரோகம் போன்றவற்றைத் தட்டிக் கேட்காதது மட்டுமல்ல, மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தம் அணிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மறுபுறத்தில், மாநில மக்களின் நலனுக்கு எதிராக மத்திய பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சிக்க ஓபிஎஸ் தலைமையிலான அணியும் தயாராக இல்லை. மக்களின் நலனை விட, ஊழல் சாம்ராஜ்யமும், ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள பாஜகவுடன் தாஜா செய்து கொள்வதிலேயே அதிமுக இரண்டு அணிகளும் குறியாக உள்ளனர்.
மேற்கண்ட பின்னணியில் மத்திய பாஜக அரசின் மதவெறி மற்றும் நாசகர பொரு ளாதார நடவடிக்கைகளையும், தமிழகத்தை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்தும், தமிழக அரசின் மக்கள் விரோத ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்தும், மாநில உரிமை களை பாதுகாத்திடவும், தனியாகவும் இடதுசாரிகட்சிகள் மற்றும் இடதுசாரி மக்கள் அமைப்பு டன் இணைந்து உருவாகியுள்ள தமிழக மக்கள்மேடையின் சார்பிலும், மக்கள் பிரச்சனை களில் இணைந்து போராட முன்வரும் கட்சிகளுடன் இணைந்து வலுமிக்க போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக